நைஜீரியாவில் இருந்து சென்னை வந்தவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அமைச்சர் மா. சுப்பிரமணியன்

by Editor / 16-12-2021 08:54:53am
நைஜீரியாவில் இருந்து சென்னை வந்தவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ஒமைக்ரான் பரவாமல் தடுக்க தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக சர்வதேச விமானநிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதிக ஆபத்து ஏற்படக்கூடிய 12 நாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதற்கிடையே, நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த, 47 வயதுடைய ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று 
 உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:சென்னை வந்த, 47 வயதுடைய ஒருவர் இரண்டு ‘டோஸ்’ தடுப்பூசி போட்டுள்ளார்.அவரது குடும்பத்தினர் ஆறு பேருக்கும், அவருடன் விமானத்தில் பயணித்த ஒருவருக்கும் மரபியல் மாற்றம் கண்டறியப்பட்டுள்ளது. இது ஒமைக்ரான் வகையா என்பதை கண்டறிய, பெங்களூரு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில், 40 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 36 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களது மாதிரிகளும் பெங்களூரு அனுப்பப்பட்டுள்ளன.உலக சுகாதார அமைப்பு, மரபியல் மாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று மிக வேகமாக பரவக்கூடியது என எச்சரித்து உள்ளது. 

இந்த தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள முக கவசம் அணிவதும், இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வதும் மட்டுமே நிரந்தர தீர்வு. மூன்றாம் தவணை தடுப்பூசி மற்றும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து, மத்திய அரசு முடிவு எடுக்கும்,தமிழகத்தில் இதுவரை 82 சதவீதம் பேர் முதல் தவணையும், 52 சதவீதம் பேர் 2 தவணையும் தடுப்பூசி போட்டுள்ளனர். தடுப்பூசி போடுபவர்களுக்கு  பாதிப்பு இல்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

 

Tags :

Share via