இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் அதிகரிப்பு ..... பிரதமர் மோடி நாளை ஆலோசனை

by Admin / 22-12-2021 01:43:50pm
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் அதிகரிப்பு .....   பிரதமர் மோடி நாளை ஆலோசனை


இந்தியாவில் டெல்டா வைரஸ் தொற்றால் 2-வது அலை உருவாகி மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. அதில் இருந்து மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு திரும்பிய நிலையில், தற்போது உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தி வருகிறது.

டெல்டாவை விட அதிக வீரியம் கொண்டதாக கருதப்படுவதால், 3-வது அலைக்கு வாய்ப்பு அதிகம் எனக் கருதப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் 213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 57 பேர், மகாராஷ்டிராவில் 54 பேர், தெலுங்கானாவில் 24 பேர், கர்நாடகாவில் 19 பேர், ராஜஸ்தானில் 18 பேர், கேரளாவில் 15 பேர், குஜராத்தில் 14 பேர் என பாதிப்பு அதிகரித்து வருகிறது.

வரும் வாரங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், அந்தந்த மாநிலங்களில் உள்ள விடுமுறை கொண்டாட்டங்கள் வர இருப்பதால் ஒமைக்ரான் வேகமாக பரவ வாய்ப்புள்ளது.

இதை கருத்தில் கொண்டு இரவு நேர ஊரடங்கு, உதவி மையம், கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. பரிசோதனையில் 10 சதவீதம் பாசிட்டிவ் இருந்தால், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, ஒமைக்ரான் தொற்று காரணமாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.

 

Tags :

Share via