ஒமைக்ரான் பரவலை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பும் நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

by Admin / 05-01-2022 11:59:01am
ஒமைக்ரான் பரவலை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பும் நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

ஒமைக்ரான் பரவலை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பும் நாள்தோறும் உயர்ந்து வருகிறது.
 
முக்கிய நகரங்களில் தொற்று மின்னல் வேகத்தில் பரவுவது 3-வது அலை தொடங்கி விட்டதை காட்டுவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதற்கேற்றார்போல் ஒரு வாரம் முன்பு 6 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு, நாள்தோறும் உயர்ந்து இன்று 58 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 58,097 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

நேற்று முன்தினம் பாதிப்பு 37,379 ஆக இருந்தது. நேற்று ஒரேநாளில் சுமார் 56 சதவீதம் பாதிப்பு உயர்ந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 50 லட்சத்து 18 ஆயிரத்து 358 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 18,466 பேருக்கு தொற்று உறுதியானது. முந்தைய நாள் பாதிப்பு 12,160 ஆக இருந்த நிலையில், நேற்று 50 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக மும்பையில் மட்டும் பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் நேற்று முன்தினம் பாதிப்பு 6,078 ஆக இருந்த நிலையில், நேற்று பாதிப்பு 50 சதவீதம் உயர்ந்தது. அங்கு புதிதாக 9,073 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் கொல்கத்தாவில் மட்டும் 4,759 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

டெல்லியிலும் தொற்று அதிவேகமாக பரவுகிறது. அங்கு புதிதாக 5,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் தினசரி பாதிப்பு 1,290-ல் இருந்து நேற்று 2,479 ஆக உயர்ந்தது.

தமிழ்நாட்டில் ஒரு நாள் பாதிப்பு ஆயிரம் உயர்ந்து, புதிதாக 2,731 பேருக்கு தொற்று உறுதியானது. கேரளாவிலும் தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்தது. அங்கு புதிதாக 3,640 பேருக்கு தொற்று உறுதியானது.

இதேபோல பல மாநிலங்களில் தினசரி பாதிப்பு நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் இரு மடங்கு அதிகரித்துள்ளது.

பஞ்சாபில் 419-ல் இருந்து 1,005 ஆகவும், பீகாரில் 344-ல் இருந்து 893 ஆகவும், தெலுங்கானாவில் 482-ல் 1,052 ஆகவும் புதிய பாதிப்பு உயர்ந்தது. ஜார்கண்டில் தினசரி பாதிப்பு 1,481-ல் இருந்து 2,681 ஆகவும், குஜராத்தில் 1,259-ல் இருந்து 2,265 ஆகவும் உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 453 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 534 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,82,551 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 15,389 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 43 லட்சத்து 21 ஆயிரத்து 803ஆக உயர்ந்தது.

புதிய பாதிப்புகள் நாள் தோறும் கடுமையாக உயர்வதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருகிறது.

இன்றைய நிலவரப்படி 2,14,004 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை நேற்று முன்தினத்தை விட 42,174 அதிகமாகும்.

நாடு முழுவதும் நேற்று 96,43,238 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் மொத்த எண்ணிக்கை 147 கோடியே 72 லட்சத்தை கடந்துள்ளது.

இதற்கிடையே நேற்று 13,88,647 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தம் 68.38 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via