கோவில் நிலத்தில் குடியிருந்து வரும் பொதுமக்கள் ரூ.16 கோடி வரிப்பாக்கியை கட்டக்கோரி நோட்டீஸ்

தென்காசி மாவட்டம், தென்காசி ஊராட்சி ஒன்றிய எல்லைப் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது சில்லரைப்புரவு ஊராட்சி. இந்த ஊராட்சியில் குறுக்கிட்டானூர், முத்துமாலைபுரம், வேலப்பனூர், காக்கையனூர், ராமநாதபுரம் உள்ளிட்ட குக்கிராமங்கள் உள்ளது.
இந்த நிலையில், இந்த கிராமங்களில் உள்ள சுமார் 53 ஏக்கர் நிலமானது பண்பொழி அருள்மிகு திருமலை குமார சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமானது என கூறப்படும் நிலையில், இந்த நிலத்தில் பல தலைமுறைகளாக வீடு கட்டி வாழ்ந்து வரும் 260-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் அவர்கள் இதுவரை கோயில் நிலத்தில் குடியிருந்து வந்ததற்கான வரித்தொகை செலுத்த வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதாவது, தற்போது கோயில் நிலத்தில் குடியிருந்து வரும் 260 குடும்பத்தை சேர்ந்தவர்கள் தலா ரூ.6 லட்சம் வரிப் பாக்கி தொகையை கோயில் நிர்வாகத்திற்கு கட்ட வேண்டும் எனவும், மேலும் அபராத தொகை கட்ட தவறினால் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் வெளியேற்றப்படுவார்கள் எனவும் கோயில் நிர்வாகம் சார்பில் தற்போது நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த பகுதியில் வசித்து வரும் பொது மக்களின் நலன் கருதி கோயில் நிர்வாகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள நோட்டீசை திரும்ப பெற வேண்டுமெனவும், தினக்கூலிகளாக வேலை பார்த்து வரும் தாங்கள் எப்படி ரூ. 6 லட்சம் பணத்தை கட்ட முடியும் எனவும், ஆகவே அந்தப் பகுதியில் வசித்து வரும் பொது மக்களின் உடைமைக்கும், உரிமைக்கும் பாதுகாப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் சந்தித்து அந்தப் பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோரிக்கை மனு ஒன்றினை அளித்தனர்.
அந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்டம் வருவாய் அலுவலர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது
Tags : கோவில் நிலத்தில் குடியிருந்து வரும் பொதுமக்கள் ரூ.16 கோடி வரிப்பாக்கியை கட்டக்கோரி நோட்டீஸ்