டெண்டர் முறைகேடு வழக்கு: எஸ்.பி.வேலுமணி மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி தனது சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரது நிறுவனங்களுக்கு பலகோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி, நகராட்சி பணிக்கான ஒப்பந்தங்களை முறைகேடாக வழங்கியதாக குற்றம்சாட்டி அவர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி அறப்போர் இயக்கம் சார்பிலும், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் விசாரணையை விரைந்து முடித்து பத்து வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து எஸ்பி.வேலுமணி உச்ச நீதிமன்றத்தில் எஸ்பி.வேலுமணி மேல்முறையீடு செய்தார்.
அந்த மேல் முறையீட்டில் அரசின் கொள்கை முடிவுகளை மட்டுமே அமைச்சர் என்ற முறையில் தான் எடுத்ததாகவும் இந்த புகாருக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த வழக்கு தொடரப்பட்டு இருப்பதாகவும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதால் இந்த சூழலை சாதகமாக்கி தன்னை வேண்டுமென்றே சிக்கவைக்க முயற்சிப்பதாக வேலுமணி மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார்.இந்த முறையீட்டை பரிசீலித்த தலைமை நீதிபதி அடுத்த வாரம் வழக்கை விசாரணைக்கு எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
Tags :