முன்னாள் அ.தி.மு.க. மேயர் எம்.எஸ்.ஆர்.ஜெயா காலமானார்

திருச்சி மாநகராட்சியில் 2011-16 வரை அ.தி.மு.க.வின் முதல் பெண் மேயராக பதவி வகித்தவர் எம்.எஸ்.ஆர்.ஜெயா. திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் எம்.எஸ்.ராஜேந்திரனின் மனைவியான இவர் திருச்சி பீமநகர் நியூராஜா காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை ஜெயாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
வருகிற பிப்ரவரி 19-ந் தேதி நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருந்த நிலையில் ஜெயா இறந்த செய்தி அ.தி.மு.க.வினரை அதிர்ச்சி அடைய செய்தது.
அவரது உடலுக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், கட்சியினர், தொழிலதிபர்கள், மாற்று கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Tags :