ஸ்டெர்லைட்:  ஆக்சிஜன் விநியோகம் தொடக்கம் : நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

by Editor / 13-05-2021 04:03:57pm
 ஸ்டெர்லைட்:  ஆக்சிஜன் விநியோகம் தொடக்கம் : நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து முதற்கட்டமாக 4. 82 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொரோனா இரண்டாவது அலை அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால், ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தாமாகவே முன்வந்து, ஆக்சிஜன் தயாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கேட்டது. ஆனால் தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையினை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்கப்படும் என்ற உறுதியோடு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. 
பின்பு, தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மட்டுமே செய்ய வேண்டும், வேறு எந்த நடவடிக்கைக்கும் அனுமதிக்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 5ஆம் தேதி ஆக்சிஜன் உற்பத்திக்காக மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையிலான 9 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவினர் காலை, மாலை என இருவேளைகளில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து ஆக்சிஜனை தயாரிப்பதற்கான வேலைகள் நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலையில் புதன்கிழமை இரவு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக 5 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது.இதையடுத்து, 4.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட லாரியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து அனுப்பி வைத்தார். காவல் துறை பாதுகாப்புடன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டது. லாரியில் இருந்து திரவ ஆக்சிஜன் மருத்துவமனை சேமிப்புக்கிடங்கில் சேகரிக்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், “ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து முதற்கட்டமாக 4.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று நாள்கள் 10 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும். இதையடுத்து, தினமும் 35 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும். இந்த ஆக்சிஜன் 98 சதவிகிதம் சுத்தமானது. ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் தமிழகத்தின் மருந்துவ தேவைக்கு மட்டுமே வழங்கப்படும்” என தெரிவித்தார்.

 

Tags :

Share via