ஒரே நாளில் ரூ.5.41 கோடி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம்

by Admin / 27-02-2022 01:24:20pm
ஒரே நாளில் ரூ.5.41 கோடி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம்


கொரோனா தொற்று பரவலுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் சராசரியாக 70 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரம் பக்தர்களும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என வார நாட்களில் 80 ஆயிரத்தில் இருந்து 95 ஆயிரம் பக்தர்களும் தரிசனம் செய்து வந்தனர்.

வைகுண்ட ஏகாதசி, பிரம்மோற்சவம் போன்ற விழா நாட்களில் ஒரு லட்சத்தில் இருந்து 2 லட்சம் வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

கொரோனா பரவல் அதிகரித்த நேரத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 

கொரோனா பரவல் குறைந்ததும் இலவச தரிசனத்தில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ரூ.300 டிக்கெட்டில் 25 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

இலவச தரிசனத்தில் கூடுதலாக 10 ஆயிரம் டிக்கெட்டுகள் என மொத்தம் 30 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

சாதாரணப் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வார நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிபாரிசு கடிதம் மூலம் பெறும் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்து, சாதாரணப் பக்தர்கள் இலவச தரிசனத்தில் 2 மணிநேரம் கூடுதலாக வழிபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஓரிரு நாட்களாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போது உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் கோவிலில் 56 ஆயிரத்து 559 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 28 ஆயிரத்து 751 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். 

தற்போது கொரோனா ஊரடங்குக்கு பிறகு நேற்று முன்தினம் ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.5 கோடியே 41 லட்சம் கிடைத்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo