நல்லெண்ணங்களை தேர்வு செய்யவும்..

by Editor / 01-03-2022 06:58:51am
நல்லெண்ணங்களை தேர்வு செய்யவும்..

 
வாழ்க்கையில் நமக்கு நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் நாம் விதியையும், கர்ம வினைகளையும், கிரகங்களின் சுழற்சியையும் காரணமாக நினைக்கிறோம்.

நமக்கு நடப்பவை எல்லாமே நம் எண்ணங்களின் விளைவுகள்தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இந்தக் கோட்பாட்டை எத்தனையோ முன்னோர்கள் சொல்லிவிட்டுப் போனாலும், நாம் அதைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டோம்.

நம் எண்ணங்கள் நம் வாழ்க்கையை எப்படி நேரடியாகவே பாதிக்கின்றன என்பதை இப்போது அறிவியல் பூர்வமாக மேலை நாட்டவர் நிரூபித்து வருகின்றனர்.

நம் சிந்தனைகளை நல்லவை என்றும் கெட்டவை என்றும் இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.

 இவ்விரண்டு வித சிந்தனைகளும் எல்லா மனிதர்களுக்கும் இயல்பாக வருபவைதான்.

அவற்றை அடையாளம் கண்டு இனம் பிரிப்பதில்தான் நம் திறமை உள்ளது. அன்பு, பாசம், நட்பு, மகிழ்ச்சி, பெருமை, உற்சாகம், உதவி மனப்பான்மை போன்றவை நல்ல சிந்தனைகள் என்றும்,

கோபம், வெறுப்பு, பகை, அச்சம், கவலை, துக்கம், பொறாமை, தாழ்வு மனப்பான்மை, சுய பச்சாதாபம், போன்றவை கெட்ட சிந்தனைகள் என்றும் கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு சராசரியாக 60000 எண்ணங்கள் தோன்றி மறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன். அதில் நல்ல சிந்தனைகளையும் கெட்ட சிந்தனைகளையும் இனம் கண்டுபிடிப்பது நடக்கக் கூடிய காரியமா என்ன?

ஆனால் அதற்குக் குறுக்கு வழி ஒன்று உள்ளது. அதுதான் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் எவ்வாறு உணர்கிறோம் என்று கண்டறிவது. 

அதாவது, நல்ல சிந்தனைகள் நம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்போது நாம் மிகவும் சுகமாக உணர்வோம். நம் மகிழ்ச்சி அதைக் காட்டிக் கொடுத்துவிடும்.

அச்சம், கவலை, கோபம், பொறாமை, குற்ற உணர்வு போன்ற எதிர்மறை சிந்தனைகள் நம் மனதில் ஓடும்போது, அசௌகரியமாக உணர்வோம்.

எதிர்மறை உணர்வுகள் நம்மைத் தாக்கும்போது, நாம் சுதாரித்துக் கொள்ள வேண்டும். 

உடனடியாக நம் சிந்தனைகளை ஆராய்ந்தோமானால், தீய சிந்தனைகள் நம் மனதை ஆக்கிரமித்திருப்பதைக் காணலாம்.

அப்படிப்பட்ட சமயங்களில், அந்த சிந்தனையின் ஓட்டத்திலிருந்து உடனடியாக விடுபடுவதும் ஒரு பெரிய சவால்தான். ஏனென்றால், சிந்தனைகளின் போக்கை மாற்றுவதென்பது சுலபமான காரியமல்ல.

நமது சுவாசத்தைக் கவனிக்கத் தொடங்கலாம். எண்ணத்திற்கும் சுவாசத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது.

உடனே நமக்கு மிகவும் பிடித்தமான, நல்ல விஷயங்கள் எதையாவது வலுக்கட்டாயமாக நம் நினைவுக்குக் கொண்டு வரவேண்டும்.

உதாரணத்துக்கு, உங்கள் வீட்டுக் குழந்தைகளோடு நீங்கள் விளையாடிய நினைவுகள், மலர்கள் பூத்துக் குலுங்கும் பூந்தோட்டம், அருவியில் நீராடிய அனுபவம், நண்பர்களுடன் பொழுது போக்கிய நினைவுகள், நீங்கள் பெருமையாக உணர்ந்த தருணங்கள்,

இப்படி எதை வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால், உடனடியாக ஒரு நல்ல பாடலைப் போட்டுக் கேட்கலாம். அல்லது உங்கள் சிந்தனையைத் தொடரமுடியாத விதத்தில் ஏதேனும் ஒரு பணியில் ஈடுபடலாம்.

இதன்மூலம் தவறான உணர்வுகளின் தாக்கத்திலிருந்து நீங்கள் விடுபட முடியும். ஆரம்ப காலங்களில் இப்படி சிந்தனையோட்டத்தை இனம் கண்டு தவிர்ப்பதும், மாற்றுவதும் மிகவும் கடினமாகத் தெரியும்.

காட்டு வெள்ளத்தில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கும். ஆனால் நீங்கள் இதைப் பிடிவாதமாகத் தொடரும்போது, பழகி விடும். 

மேலும், எதிர்மறை உணர்வுகளை உங்களால் சற்று நேரம் கூடத் தாங்க முடியாத நிலை ஏற்படும்.

இந்த நிலை வந்துவிட்டால், உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள். அதன் பிறகு உங்கள் வாழ்க்கையில் எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்.

எதிர்மறை எண்ணங்கள் மனதிற்குள் நுழையவிடாமலேயே தடுக்க, நமது ஓய்வு நேரங்களில் எல்லாம், நேர்மறையான எண்ணங்களை நாமாக விரும்பி மனதில் ஓடவிட்டு சிந்தனை செய்யலாம். 

இதுவே பிறகு பழக்கத்தின் அடிப்படையில் மனதில் நல்ல மாற்றத்தை உருவாக்கும். (உதாரணம் - ஞானிகளின் கருத்துக்களை சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளலாம்)

எண்ணங்களின் போக்கிற்கும், நம் வாழ்க்கையின் போக்கிற்கும் உள்ள நேரடித் தொடர்பை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள். வாழ்க்கை இன்பமயமாக மாறி விடும்.

எண்ணம்போல் வாழ்கை, கெடுவான் கேடு நினைப்பான், வினை விதைத்தவனே வினை அறுப்பான்.

 எண்ணிய எண்ணியபடியே ஆகும், எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் இருந்திடில்....

அவரவர் வாழ்வின் சிற்பி அவரவர் எண்ணங்களே!!!

எண்ணங்களை நேர்மறையாக மாற்றினால் அனைத்தையும் மாற்றலாம்.

எண்ணம் எழுந்து தானாக அலையாமல் எண்ணி எண்ணிட இனிதே பயக்கும்.

 

Tags :

Share via