உக்ரைன் எல்லைக்கு செல்லும் ஆந்திர அரசு அதிகாரிகள் குழு

by Admin / 03-03-2022 02:47:24pm
 உக்ரைன் எல்லைக்கு செல்லும் ஆந்திர அரசு அதிகாரிகள் குழு

உக்ரைன், ரஷியா போர் தீவிரமடைந்துள்ளதால் அங்கு படித்து வரும் இந்திய மாணவர்கள் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

உக்ரைனில் மருத்துவம் படித்து வரும் மாணவ, மாணவிகள் சிலர் மட்டும் சிறப்பு விமானங்கள் மூலம் பத்திரமாக தாயகம் திரும்பியுள்ளனர். மேலும் 680 மாணவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
 
இந்திய மாணவர்கள் அனைவரையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இவர்களுக்கு உதவியாக இருக்க ஆந்திர அரசு அதிகாரிகள் குழுவும் உக்ரைன் எல்லை வரை செல்லலாம் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஒப்புதல் அளித்துள்ளார். அதன் பேரில் சுமார் 10 பேர் கொண்ட குழு உக்ரைன் எல்லைக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் டெல்லி சென்று அங்கிருந்து உக்ரைன் செல்லும் விமானங்களில் செல்ல உள்ளனர்.

இது குறித்து இந்தியாவில் உள்ள உக்ரைன் தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இக்குழு டெல்லி செல்ல உள்ளது.

இதுவரை சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் பாதுகாப்பாக நாடு திரும்பிய நிலையில், பலர் ருமேனியா எல்லையோரத்தில் உள்ள கூடாரத்தில் இந்திய விமானங்களுக்காக காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் சித்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களின் பட்டியலை தயார் செய்து அவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளது. 

அந்தக் கணக்கீட்டின்படி இன்னும் 52 பேர் திருப்பதி, திருச்சானூர், சந்திரகிரி, காளஹஸ்தி, நகரி , ரொம்பி செர்லா, கலகட, மதனபள்ளி, வெதுருகுப்பம், புங்கனூர், கலிக்கிரி உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த சித்தூர் மாவட்டத்தினர் உக்ரைனில் உள்ளனர். அதில் அதிகளவில் திருப்பதியைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர்.

இதில் 12 பேர் ருமேனிய எல்லையில் உள்ள கூடாரங்களில் இந்திய விமானத்துக்காக காத்திருக்கின்றனர். விரைவில் அவர்கள் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


 

 

Tags :

Share via