பெண்களிடம் ஆன்லைனில் மோசடி செய்த 8 பேர் கைது-2.50 லட்சம் பறிமுதல்

by Editor / 10-03-2022 11:41:50am
 பெண்களிடம் ஆன்லைனில் மோசடி செய்த 8 பேர் கைது-2.50 லட்சம் பறிமுதல்

சித்தூர் : சித்தூரில் சமூக இணையதளத்தின் மூலம் பெண்களிடம் ஆன்லைனில் மோசடி செய்த சைபர் குற்றவாளிகள் 8 பேரை போலீசார் கைது செய்து ₹2.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

சித்தூர் இரண்டாவது காவல் நிலையத்தில் நகர டிஎஸ்பி சுதாகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சித்தூரில் ஒரு பெண்ணிடம் ஆன்லைனில் ₹2 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்ததாக இரண்டாவது காவல் நிலைய இன்ஸ்பெக்டர் யுகாந்தருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், பேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையதளத்தின் மூலம் பெண்களுக்கு லைக் அனுப்பி நண்பர்கள் ஆகிறார்கள். பின்னர் அவர்களின் மொபைல் போன் எண்ணை பெற்றுக்கொண்டு இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் மூலம் மெஸேஜ் அனுப்பி நண்பர்களாக மாறுகிறார்கள்.

பின்னர், அவர்களிடம் ஆசை வார்த்தைகளுடன் பேசுகிறார்கள். அப்போது மொபைல் போனுக்கு ஓடிபி எண் வருகிறது. அந்த எண்ணை இவர்கள் அவர்களுக்குத் தெரியாமல் ஹேக் செய்து பின்னர் அவர்களின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் முழுவதையும் வேறொரு வங்கி எண்ணுக்கு பரிமாற்றம் செய்துக் கொள்கிறார்கள். அந்த வங்கி கணக்கில் இருந்து சில புரோக்கர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்கிறார்கள். அந்த புரோக்கர்களுக்கு ஒரு லட்சத்திற்கு கமிஷன் ₹5 ஆயிரம் கொடுத்து பணத்தை பெற்று மோசடி செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து, ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட சைபர் குற்றவாளிகளான விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சாம்பசிவ ராவ்(32), ஆனந்த்(35), சீனு (21), குமார்ராஜா (21) லோக்கி(24), வாரங்கல மாவட்டத்தை சேர்ந்த சிவகுமார்(21), ஸ்ரேவன் குமார்(31), கடப்பா மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார்(30) ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 2.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவர்கள் வேறு யார் யாரிடம் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு உள்ளார்கள் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சைபர் குற்றவாளிகளை மிக குறுகிய காலத்தில் கைது செய்த போலீசாருக்கு எஸ்பி செந்தில்குமார் உத்தரவின் பேரில் பாராட்டுச் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.அப்போது, இரண்டாவது காவல் நிலைய இன்ஸ்பெக்டர் யுகந்தர், சப்-இன்ஸ்பெக்டர்கள் லோகேஷ், மல்லிகார்ஜுனா உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.

 

Tags : 8 arrested for cheating on women online - Rs 2.50 lakh confiscated

Share via