கல்லூரி மாணவர் கம்பத்தில் மோதி உயிரிழப்பு
சென்னையில் மின்சார ரெயில் பயணத்தின்போது கல்லூரி மாணவர்கள் அடிக்கடி எல்லை மீறும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
மிகவும் ஆபத்தான நிலையில் படிக்கட்டுகளில் தொங்கியபடி ரெயில் பயணம் மேற்கொள்வதை கல்லூரி மாணவர்கள் வழக்கப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.
இதுபோன்ற நேரங்களில் ரெயில்களில் பயணம் செய்யும் பொது மக்களில் சிலர் அவர்களை எச்சரித்து உள்ளே வர சொன்னாலும் அவர்கள் யாரும் வருவதில்லை.
இதன் காரணமாக படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள் ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் 20 பேர் மொத்தமாக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
பேரம்பாக்கம் அருகே உள்ள கடம்பத்தூரை சேர்ந்த வெங்கடேசன் என்ற 19 வயது மாணவரும், கும்பலோடு கும்பலாக ரெயிலில் தொங்கிக் கொண்டு சென்றார். இவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சென்ட்ரலில் இருந்து ரெயில் புறப்பட்ட போது மாணவர்கள் அனைவரும் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே பயணம் செய்துள்ளனர்.
ரெயில் பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் ரெயில் நிலையம் அருகே சென்ற போது தொங்கிக் கொண்டு சென்ற மாணவர் வெங்கடேசன் தண்டவாளம் அருகே அமைக்கப்பட்டு இருந்த மின்கம்பத்தில் வேகமாக மோதினார். இதில் மின்னல் வேகத்தில் அவர் ரெயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதனால் அவருடன் தொங்கியபடி பயணம் செய்த சகமாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது வெங்கடேசனின் நண்பரான கல்லூரி மாணவர் விஜய் அவரை காப்பாற்ற முயன்றார். இதில் அவரும் ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்தார்.
இதனை பார்த்து பயணிகளும், கல்லூரி மாணவர்களும் கூச்சல் போட்டனர். பின்னர் இதுபற்றி உடனடியாக ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கீழே விழுந்த 2 மாணவர்களும் பயணம் செய்த மற்ற மாணவர்கள் அடுத்த ரெயில் நிலையத்தில் இறங்கி லோகோ ரெயில் நிலையம் நோக்கி ஓடி வந்தனர். அதற்குள் பெரம்பூர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து இருவரையும் மீட்டு ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருப்பினும் மாணவர் வெங்கடேசன் உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த மாணவர் விஜய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பூர் ரெயில்வே இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இது தொடர்பாக ரெயில்வே போலீசார் கூறும் போது, “படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் ஆபத்து பற்றி தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகிறோம். இருப்பினும் மாணவர்கள் அதனை கேட்காமல் படிக்கட்டில் தொங்கி உயிரிழந்து வருகிறார்கள்.
எனவே இதுபோன்ற பயணங்களை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டனர்.
Tags :