கோழிப்பண்ணையில் தீ விபத்து 8,500 கோழிகுஞ்சுகள் இறந்தன
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சாலையூரை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது.
கணேஷ்குமார் தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வருவதுடன், கோழிப்பண்ணையும் வைத்து நடத்தி வருகிறார். இதற்காக அங்கு 2 செட்டுகள் அமைத்து கோழி குஞ்சுகளை வாங்கி அதில் வளர்த்து வருகிறார்.
கோழி குஞ்சுகளை பராமரித்து கொள்வதற்கு என ஆட்கள் நியமித்து அதனை பராமரித்து வருகிறார். தினமும் காலை, மாலை வேளையில் பண்ணைக்கு சென்று கோழி குஞ்சுகளை அவர் பார்த்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று இரவு தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கோழிகுஞ்சு பண்ணையில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்து அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது.இதை பார்த்து அதிர்ச்சியான அக்கம்பக்கத்தினர் தோட்ட உரிமையாளர் கணேஷ்குமாருக்கும், அன்னூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பண்ணையில் இருந்த 8,500 கோழிகுஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்தன. இதுதவிர கோழிக்குஞ்சுகளுக்கு வைத்திருந்த தீவனங்கள், மரசாமான்கள் எரிந்து சேதமானது. இதன் மொத்த மதிப்பு 12 லட்சம் ஆகும்.தீ விபத்துக்கான காரணம் குறித்து அன்னூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :