3 பெண்களிடம் ரூ.32 லட்சம் மோசடி

by Staff / 30-03-2022 11:46:30am
3 பெண்களிடம் ரூ.32 லட்சம் மோசடி

புதுவை காமராஜர்நகர் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் உதயகுமார். இவர் பேட்டரி மற்றும் இன்வெட்டர் கடை வைத்து நடத்தி வருகிறார். 

இதற்கிடையே உதயகுமாருக்கு நன்கு அறிமுகமானவரான புதுவை பாப்பாஞ்சாவடியை சேர்ந்த சிவபாலன் என்பவர்  தனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும், அதனால் கடன் உள்ளதாகவும் அந்த கடனை சரி செய்ய கொம்பாக்கத்தில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தை விற்க உள்ளதாக தெரிவித்தார்.

இதனை உதயகுமார் தனது மனைவி கலைவாணியிடம் தெரிவித்தார். இதை யடுத்து கலைவாணி தனது தோழிகளான கீதா, ராஜேஸ்வரி ஆகியோருடன் ஆலோசனை செய்து 3 பேரும் சிவபாலனுக்கு சொந்தமான இடத்தை வாங்கி பிரித்துகொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி 3 பேரும் சேர்ந்து ரூ.32 லட்சத்தை சிவபாலனிடம் கொடுத்தனர். சிவபாலனும் அந்த பணத்தை பெற்றுக்கொண்டு இடத்தை கிரயம் செய்து கொடுத்தார். இதைத்தொடர்ந்து கலைவாணி உள்பட 3 பேரும் சிவபாலனிடம் தங்களுக்கு அந்த இடத்தை பிரித்து கொடுக்குமாறு கேட்டு வந்தனர். 

ஆனால் சிவபாலன் இடத்தை பிரித்து கொடுக் காமல் காலம் கழித்து வந்தார். இதனால் சந்தேகமடைந்த கலைவாணி கிரயம் பெற்ற இடத்துக்கு சென்று விசாரித்தார். 

அப்போது அந்த இடம் வேறொருவருக்கு சொந்தமானது என்பதும், சிவபாலன் தன்னுடைய இடம் என்று கூறி பணம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. 

இதனை அறிந்த கலைவாணி மற்றும் அவரது தோழிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சிவபாலனிடம் செல்போன் வழியாக தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் உங்களால் என்ன செய்ய முடியும் என்று கலைவாணி மற்றும் அவரது தோழிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது.

மேலும் இனிமேல் என்னிடம் பிரச்சினை வைத்துக்கொண்டால் 3 குடும்பத்தினரையும் கூலிபடையை வைத்து கொலை செய்து விடுவதாக சிவபாலன் மிரட்டினார். 

இதுகுறித்து கலைவாணி பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags :

Share via