தூத்துக்குடி: மூவர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது

by Editor / 18-05-2021 06:21:11pm
தூத்துக்குடி: மூவர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது


தூத்துக்குடி, இடைச்சிவிளை, விவேகானந்தாபுரத்தைச் சேர்ந்த மயிலையா மகன் கணேசன் தரப்பினருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மிக்கேல் மகன் பீட்டர் என்ற ஜேசுமரியான் தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 03.06.2001 அன்று கணேசன் என்பவர் தனது சகோதரர்களான முருகேசன், வையனபெருமாள், ஆதிலிங்கராஜன் ஆகியோர், அவர்களது வீட்டருகில் டிரக்கரை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த பீட்டர் என்ற ஜேசுமரியான் மற்றும் அவரது மகன்களான சுதாகர் (47), விஜயேந்திரன், கோபி மற்றும் அவரது உறவினரான சிலுவைப்பிச்சை மகன் குருசமுத்து ஆகியோர் அரிவாள் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி முருகேசன், வையனப்பெருமாள் மற்றும் ஆதிலிங்கராஜன் ஆகியோரை கொலை செய்தனர்.
இது சம்மந்தமாக இடைச்சிவிளையைச் சேர்ந்த கணேசன் மனைவி ஆதிலெட்சுமி அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்மந்தப்பட்டவர்களை கைது செய்தனர். இவ்வழக்கில் விசாரணை முடிக்கப்பட்டு கடந்த 04.09.2001 அன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் 1வது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இவ்வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான சுதாகர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் நீண்டகாலமாக தலைமறைவாக இருந்துவந்தார். இதனையடுத்து கடந்த 02.02.2021 அன்று நீதிமன்றம் அவரை கைது செய்ய பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது.
தலைமறைவாக இருந்த சுதாகரை உடனடியாக கைது செய்வதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தட்டார்மடம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சாம்சன் ஜெபதாஸ் தலைமையிலும்,  தூத்துக்குடி  உதவி ஆய்வாளர் வேல்ராஜ், தலைமைக் காவலர்கள் பென்சிங், சாமுவேல், மாணிக்கராஜ், மகாலிங்கம், காவலர்கள் செந்தில், திருமணிராஜன் மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட மேற்படி தனிப்படையினர் நேற்று (18.05.2021) தூத்துக்குடி பூபால்ராயபுரத்தில் வைத்து சுதாகரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.  இவர் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமறைவாக இருந்த ரவுடியை கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார்.
 

 

Tags :

Share via