ரமலான் நோன்பு இன்று தொடங்குகிறது

by Staff / 02-04-2022 12:09:08pm
 ரமலான் நோன்பு இன்று தொடங்குகிறது

இஸ்லாமிய புனித மாதமான ரமலான் அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகள் இஸ்லாமிய விவகாரங்களில் சவுதிஅரேபியாவின் முடிவுகளை பின்பற்றி வருகிறது. இதில் நேற்று சவுதி அரேபியாவில் பிறை தென்பட்டதால் ரமலான் மாதம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று அமீரக பிறை பார்க்கும் கமிட்டி ரமலான் மாதம் தொடங்குவது குறித்து அறிப்பை வெளியிட்டது. அதன்படி அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் ரமலான் மாத நோன்பு தொடங்குகிறது. இதனை தொடர்ந்து அமீரகம் உள்ளிட்ட பெரும்பாலான வளைகுடா நாடுகளும் இன்று முதல் ரமலான் மாதம் தொடங்குவதாக அறிவித்துள்ளன.

இஸ்லாமிய நாள்காட்டி பிறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் ஆங்கில நாள்காட்டிக்கும், இஸ்லாமிய நாள்காட்டிக்கும் வேறுபாடுகள் இருந்து வருகிறது. இதில் குறிப்பாக ரமலான் மாதம் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில நாள்காட்டியில் 11 நாட்கள் குறைந்து தொடங்குகிறது. கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி ரமலான் மாதம் தொடங்கியது.

இஸ்லாமிய நம்பிக்கையின்படி இந்த மாதத்தில்தான் புனித திருக்குர்ஆன் இறைதூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வானவர் ஜிப்ரயீல் வழியாக முதன் முதலாக இறைவனால் அருளப்பட்டது. இந்த மாதத்தில் ஜகாத் எனப்படும் தானம் கொடுப்பது என்பது ஒவ்வொரு இஸ்லாமியரும் செய்யக்கூடிய கடமையாகும்.

அமீரகத்தில் நேற்று பிறைபார்க்கும் கமிட்டி அறிவித்தபடி இன்று முதல் ரமலான் மாதம் நோன்பு தொடங்குகிறது. இதன்காரணமாக அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் துறைகளின் வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via