திருமண விழா இ-பதிவுக்கு புதிய விதிமுறை

by Editor / 19-05-2021 08:27:30pm
திருமண விழா இ-பதிவுக்கு புதிய விதிமுறை

 


புதிய நிபந்தனைகளுடன் திருமணத்திற்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு செய்யும் வசதி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக மே 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், திருமணம்,  இறப்பு,  மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டத்திற்குள்ளும், பிற மாவட்டத்திற்கு வெளியே பயணம் செய்ய நேற்றுமுன்தினம் முதல் ‘இ-பதிவு’ முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 அதில் திடீரென்று திருமணத்திற்கான பிரிவு நீக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், திருமணம் என்ற பிரிவை பலர் தவறாகப் பயன்படுத்தி வெளியே சுற்றுகின்றனர். இதனால், அதிக அளவில் மக்கள் வெளியே வருவதால் கொரோனா மேலும் பரவ வாய்ப்புள்ளது. எனவேதான், திருமணம் என்ற பிரிவை ‘இ-பதிவு’ இணையதளத்திலிருந்து நீக்கியுள்ளதாக தெரிவித்தது.
பின்னர், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய நிபந்தனைகளுடன் திருமணத்திற்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு செய்யும் வசதி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமண அழைப்பிதழில் விண்ணப்பதாரர் பெயர் இருக்க வேண்டும். திருமண விழாவில் பங்கேற்பவர்கள் அத்தனை பேரின் வாகனங்களும் ஒரே பதிவில் குறிப்பிடப்பட வேண்டும். அனைத்து வாகனங்களின் எண்கள், ஓட்டுநர் பெயர், கைப்பேசி எண், பயணிப்போரின் பெயருடன் இருக்கும் ஒரு அடையாள ஆவணம் அவசியம் எனவும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. 
மணமகன், மணமகள், தாய், தந்தை என இவர்களில் ஒருவர் மட்டுமே இ-பதிவை மேற்கொள்ள வேண்டுமெனவும், விண்ணப்பதாரரின் பெயர் பதிவில் கட்டாயம் இடம் பெற வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. போலி அழைப்பிதழ் பதிவேற்றம் செய்தால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via