தாம்பரம், மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரயில்களை நிரந்தர ரயில்களாக இயக்க கோரிக்கை

by Editor / 28-04-2022 09:26:49am
 தாம்பரம், மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரயில்களை நிரந்தர ரயில்களாக இயக்க கோரிக்கை

திருநெல்வேலியில் இருந்து  ஞாயிற்றுக் கிழமை தோறும் தாம்பரத்திற்கும்,  வியாழக்கிழமையில் , கோவை, மேட்டுப்பாளையத்திற்கும் வாராந்திர சிறப்பு  ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்த இரு ரயில்களும் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நெல்லை தென்காசி விருதுநகர் மாவட்ட ரயில் பயணிகள் இந்த இரு ரயில்களை நிரந்தர ரயில்களாக இயக்க வலியுறுத்தி வருகின்றனர்.

வியாழக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு நெல்லையில் இருந்து அம்பை,-பாவூர்சத்திரம்,  தென்காசி , ராஜபாளையம் , சிவகாசி,விருதுநகர், மதுரை, பழனி, பொள்ளாச்சி வழியாக கோவை மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வியாழக்கிழமை புறப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு பழனி செல்வதால் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணி சிறப்பு தரிசனம் தரிசிப்பதற்கு முருக பக்தர்களுக்கு மிகவும் வசதியாக இந்த ரெயில் உள்ளது.

மேலும் காலை 6.30  மணிக்கு கோவை சென்றடைவதால் வர்த்தகர்கள், வியாபாரம் செய்வோர் பல்வேறு பணி நிமித்தமாக கோவை  செல்வோருக்கு உதவிக்கரமாக இந்த ரெயில் உள்ளது.

ஊட்டியின் மலை அடிவாரமாக விளங்கும் மேட்டுப்பாளையம் வரை இந்த ரெயில் செல்வதால் தற்போது ஊட்டியில் தொடங்கவிருக்கும் கோடை சீசன் மலர் கண்காட்சியை கோடை விடுமுறை நாட்களில் கண்டுகளிக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் வசதியாக உள்ளது. 

பெரும்பாலான பயணிகள் கோவைக்கும், அதற்கு அடுத்தபடியாக பழனி செல்வதற்கும் இந்த ரெயிலை பயன்படுத்துகின்றனர். தென்மாவட்டங்களில் இருந்து பழனி,  பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் முதல் சிறப்பு ரெயில் இதுவாகும்.

அதைப்போல   தென்மாவட்டங்களில் இருந்து ஊட்டி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையத்திற்கும் இயக்கப்படும் முதல் சிறப்பு ரெயில் இதுவாகும்.
வண்டி எண் : 06029 / 06030 திருநெல்வேலி ~ மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி
இடையே கோடைக்கால வாராந்திர சிறப்பு ரயில் வாரந்தோறும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் 3 மாத காலத்திற்கு தற்காலிகமாக நவினரக எல்ஹெச்பி ரயில் பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.

 கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களுக்கு ஒரு நாள் சுற்றுலாவாக குறைந்த செலவில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் தென்மா வட்டங்களில் இருந்து சுற்றுலா செல்ல வசதியான ரயில் சேவையாக உள்ளது.

விடியற்காலையில் பொள்ளாச்சி வரும் இந்த ரயில், பொள்ளாச்சியில் இருந்து சுற்றுலா இடங்களான குரங்கு அருவி, எழில்மிகு ஆழியாறு அணையை கண்டுகளித்து ஆனைமலையில் உள்ள புகழ்பெற்ற மாசாணியம்மன் கோவிலில் தரிசனம் செய்து ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் சென்று அடர்ந்த காட்டினுள் வனத்துறை வாகனம் மூலம் சுற்றி பார்த்து விட்டு திரும்ப பொள்ளாச்சி ரயில் நிலையம் வந்து அன்று இரவே வரும் மேட்டுப்பாளையம் ~ திருநெல்வேலி சிறப்பு ரயிலில் ஊர் திரும்பலாம்..

அரசு பேருந்து கட்டணத்தை விட குறைந்த கட்டணத்தில் பாதுகாப்புடன் கூடிய சுகமான பயணம் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் மேற்கொள்ள வசதியாக உள்ளதாக பலரும் கருதுகின்றனர்

மேட்டுப்பாளையத்திலிருந்து திருநெல்வேலிக்கு வாரந்தோறும் வெள்ளிகிழமைகளில் இரவு 07.45 மணிக்கு புறப்படும் ரயிலில் திரும்பலாம்

இந்த ரயிலில் முன்பதிவுடன் கூடிய 2-ம் வகுப்பு படுக்கை வசதி ரயில் கட்டணம் திருநெல்வேலியில் இருந்து
பொள்ளாச்சி வரை, சிறப்பு ரயில் நிற்கும் அனைத்து ஊர்களில் இருந்து ருபாய் ரூ385/-
மூன்றடுக்கு ஏ.சி ரூ1050/- இரண்டடுக்கு ஏ.சி ரூ1440/-கட்டணமாகும்.

இதுபோல் திருநெல்வேலி-தாம்பரம் ரயில் தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழி செல்வதால் பயணிகளிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த ரயில் வாரம் மூன்று நாட்களாக இயக்க ரயில்வே வாரியம் ஏற்கனவே அனுமதி கொடுத்தும் தற்போது சிறப்பு ரயிலாகவே இயக்கப்படுகிறது. இந்த இரு ரயில்களையும் நிரந்தர ரயில்களாக இயக்க திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தி வருகின்றனர்.

 

Tags : Request to run special trains to Tambaram and Mettupalayam as permanent trains

Share via