தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வெகு விமர்சையாக நடந்தது.

by Staff / 03-10-2025 09:22:17am
தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வெகு விமர்சையாக நடந்தது.

திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். 

இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பத்து நாட்கள் நடைபெறும் தசரா பண்டிகை வெகு விமரிசையாக நடைபெறும். தமிழகம் முழுவதும் இருந்து மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனுக்காக காப்பு கட்டி முத்தாரம்மனை வேண்டி மாலை அணிவித்து விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து கோவிலுக்கு வந்து அம்மனை வழிபடுகின்றனர். 

 இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 10 நாட்களாக தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

தசரா விழாவையொட்டி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பல்வேறு விதமான காளி வேடங்கள், அனுமன், கிருஷ்ணர், ராமர் மற்றும் குரங்கு, கரடி, சிங்கம், காளி, பிச்சைக்காரன், போலீஸ், விலங்குகள் உட்பட பல்வேறு வேடங்களை அணிந்து பக்தர்கள் ஒவ்வொரு ஊரிலும் தசரா குழு அமைத்து தாரை தப்பட்டை மேளம் முழங்க பொதுமக்களிடம் பிரித்த காணிக்கையை அம்மன் உண்டியலில் போட்டு முத்தாரம்மனை வணங்கி வழிபட்டனர். 

 விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10 ஆம் திருவிழாவான  நள்ளிரவு 12 மணிக்கு நடந்தது. இதற்காக முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளினார்.தொடர்ந்து பக்தர்கள் வெள்ளத்தில் அம்பாள் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் கடற்கரை வந்தடைந்தார்.இதையடுத்து கடற்கரை மைதானத்தில் மகிஷாசுரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியானது நடந்தது. முதலில் தன்முகமாக வந்த மகிஷாசுரனை வதம் செய்த முத்தாரம்மன் அடுத்ததாக யானை முகத்துடனும் எருது முகத்துடனும் வந்த சூரனை வதம் செய்தார். அடுத்து சேவல் உருவில் வந்த மகிஷாசூரனையும் வதம் செய்தார்.  
சூரசம்ஹாரம் நடந்தது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஓம் காளி ஜெய் காளி என்று கோஷம் எழுப்பினர். அவர்கள் கோஷம் விண்ணைப் பிளந்தது.

 இந்த தசரா திருவிழாவிற்கு கடற்கரை பகுதியில் 10க்கும் மேற்பட்ட ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 50க்கும் மேற்பட்ட இடங்களில் 250 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு முக்கியமான பகுதிகள் கண்காணிக்கப்பட்டது.

பக்தர்கள் வசதிக்காக 4 தற்காலிக பேருந்து நிலையங்களும், 30 இடங்களில் கார் நிறுத்துமிடங்களும், பைக் வாகன நிறுத்துமிடங்களும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.மேலும் பக்தர்கள் திருவிழா நிறைவடைந்து மறுநாள் மாலையில் காப்பு கலைந்து செல்வதற்கு ஏற்றவாறு பாதைகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளனர்.

 

Tags : தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வெகு விமர்சையாக நடந்தது.

Share via