தூத்துக்குடி துப்பாக்கி சூடு 4-ம் ஆண்டு நினைவு தினம்.2500-போலீசார் பாதுகாப்பு
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தொடர்ந்து பல்வேறுகட்ட போராட்டங்கள் அந்த நகரில் நடைபெற்றுவந்தன.இதன் தொடர்ச்சியாக கடந்த 2011 ஆம் ஆண்டு ஆலையை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் நூறாவது நாள் 2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பல ஆயிரக்கணக்கானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
இதில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் சிக்கி 2 பெண்கள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த துப்பாக்கிச் சம்பவம் நடைபெற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இன்று நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி போராட்டத்தின் போது உயிர் நீத்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி, பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
மேலும் தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கு தடையுத்தரவு நடைமுறையில் உள்ளதால் வெளி மாவட்டத்தில் இருந்து யாரும் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நுழைவுப்பகுதிகளிலும் காவல்துறை சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி, தென்காசி, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு ஆகிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 9 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 18 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 127 காவல் ஆய்வாளர்கள் உட்படதூத்துக்குடி துப்பாக்கி சூடு 4-ம் ஆண்டு நினைவு தின பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Tags : Thoothukudi 4th Anniversary of Shooting.2500-Police Security