ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி மேலும் ஒரு வாரம் பார்வையிட ஏற்பாடு
நீலகிரி மாவட்டத்தில் கோடை ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் சீசன் நடைபெறுகிறது. கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி, ரோஜா கண்காட்சி மற்றும் படகு போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. கோடை விழாவின் சிறப்பம்சமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 124-வது மலர் கண்காட்சி கடந்த 20-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை 5 நாட்கள் நடந்தது.
இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார். 5 நாட்களில் மலர் கண்காட்சியை ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மலர் கண்காட்சி நடந்த போது தொடர் மழை பெய்ததால் எதிர்பார்த்த அளவில் சுற்றுலா பயணிகள் வரவில்லை. இந்தநிலையில் தற்போது 2 நாட்களாக மழை குறைந்து நன்றாக வெயில் அடிப்பதால் இதமான காலநிலை நிலவுகிறது.
மலர் கண்காட்சி முடிந்த பின்னரும் கூட ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. எனவே, தற்போது வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ஊட்டியில் தற்போது காலநிலை நன்றாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. மலர் கண்காட்சியின் போது அமைக்கப்பட்டு இருந்த அரங்குகள் மட்டும் அகற்றப்படும்.
மேலும் மலர் அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் மேலும் ஒரு வாரத்திற்கு பார்வையிட அப்படியே விடப்படும். சுற்றுலாத்துறை சார்பில் வருகிற 31-ம் தேதி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பூங்காவில் நடைபெறுகிறது என்றார்.
Tags : The flower show at the Ooty Government Botanical Gardens will be held for another week