14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மையான உலோக சிலைகளுடன் ஒருவர் கைது.

by Editor / 26-05-2022 11:47:53pm
14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மையான உலோக சிலைகளுடன் ஒருவர் கைது.


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருக்கடையூர் அருகே டி .மணல்மேடு கிராமத்தில் தொன்மையான 2 உலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருப்பதாகவும் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல்துறை இயக்குநர் ஜெயந்த் முரளி உத்தரவுப்படி, சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை தலைவர் தினகரன் வழிகாட்டுதலின்படி, சிலை திருட்டு தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் சின்னதுரை மற்றும் காவலர்கள் ஆகியோர் அடங்கிய சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீசார் சிலைகளை வாங்கும் வியபாரிகள் போல் தங்களை காட்டிக்கொண்டு சிலை கடத்தல்காரரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இச்சிலைகளுக்கு விலை ருபாய் 2 கோடி என பேரம் பேசப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிலை கடத்தல்காரரை நம்பவைத்து அவர் சிலையை காண்பித்தவுடன் அவரை மடக்கிப்பிடித்த சிலைதிருட்டு தடுப்புப் பிரிவு போலீசார்  கோவிந்தராஜ் மகன் சுரேஷ்  என்பவரிடமிருந்து புத்தமத பெண் கடவுள் உலோக சிலை ஒன்றும், அமர்ந்த நிலையில் விநாயகர் உலோக சிலை ஒன்றும் என 2 சிலைகளை கைப்பற்றினர். பின்னர் காவல் உதவி ஆய்வாளர் சின்னதுரை, தனி அறிக்கையுடன் மேற்கண்ட நபரை சென்னை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தார்.அவரிடமிருந்து கைபற்றப்பட்ட 2 சிலைகளில் ஒன்று புத்தமத கடவுளான அபலோகிதேஸ்வராவின் மனைவி தாரா தேவியின் சிலை என்று சொல்லப்படுகிறது. காக்கும் கடவுளாக அறியப்படும் தாராதேவியின் வழிபாடானது திபெத் நாட்டில் தோன்றியது என்று சொல்லப்படுகிறது.

இந்த சிலையானது 14ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தை சேர்ந்த  தொன்மையானது என்றும்  தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.மற்றொரு சிலையான விநாயகர் சிலை ஏறத்தாழ  300ஆண்டுகள் தொன்மையானது என்று கூறப்படுகிறது. 

14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மையான உலோக சிலைகளுடன் ஒருவர் கைது.
 

Tags : One arrested with ancient metal statues from the 14th century.

Share via