அழிந்துவரும் மேற்குத்தொடர்ச்சி மலைவனப்பகுதி
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பொதுவாக கோடைகாலங்களில் ஆங்காங்கே காட்டுத்தீ பற்றி எரிவது வழக்கம். அந்தவகையில், இந்த வருடம் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் முதல் சிவகிரி வரை உள்ள வனப் பகுதிகளில் ஆங்காங்கே காட்டு தீ பற்றி எரிந்தன. அதனை வனத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்நிலையில் கோடை காலத்திலும் புயல் மழையானது தென்காசி மாவட்ட மேற்குதொடர்ச்சிமலைப் பகுதி வனப்பகுதியில் பெய்ததால் அவ்வப்போது ஏற்பட்ட காட்டுத்தீயால் இலை சருகுகள் தீப்பிடிப்பதும்,அரியவகை மரங்கள் தீயில் எரிந்து போவதும் ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது.
இந்தநிலையில், நேற்று மாலைமுதல் புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடி பீட் மலைப்பகுதியில் பற்றி எரிய தொடங்கிய காட்டுத் தீயானது காற்றின் வேகம் காரணமாக காட்டுத் தீயானது வேகமாக பரவி கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி பீட் வனப்பகுதிக்குள் தற்போது பற்றி எரிந்து வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்து விரைந்து சென்ற கடையநல்லூர் வன ஊழியர்கள் தற்போது சொக்கம்பட்டி வனப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். எந்தவிதமான தொழில்நுட்பவசதியும் இல்லாததால் வனப்பகுதியில் பற்றியெரியும் தீயை அணைக்கும் முயற்சியானது பெரும் சவாலாக உள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.மேலும் தற்போது மேற்குத்தொடர்ச்சி மலைவனப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையிலும் தீப்பற்றிவருவது மிருகவேட்டை ,மற்றும் மரம் திருடும் கும்பலின் செயலாக இருக்குமோ என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.மொத்தத்தில் வனப்பகுதியை வனத்துறையினர் அழியவிடாமல் காப்பாற்றவேண்டுமென்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.
Tags : Endangered Western Ghats