முதல் காலாண்டில் மதுரை கோட்டத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து 35 சதவீதம் அதிகரிப்பு

by Editor / 10-07-2022 04:15:25pm
முதல் காலாண்டில் மதுரை கோட்டத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து 35 சதவீதம் அதிகரிப்பு

இந்த நிதியாண்டின் முதல் காலண்டான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மதுரை கோட்டம் சரக்கு போக்குவரத்து வருமானமாக ரூபாய் 78.54 கோடி ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 35.04 சதவீதம் அதிகமாகும். மேலும் ரயில்வே வாரியம் நிர்ணயித்த இலக்கைக் காட்டிலும் 33.14 சதவீதம் அதிகமாகும். இந்த காலாண்டில் 7.16 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. விவசாய உரம் 3.26 லட்சம் டன்களும், சுண்ணாம்புக்கல் 1.04 லட்சம் டன்களும், டிராக்டர்கள் 0.70 லட்சம் டன்களும், நிலக்கரி 0.55 லட்சம் டன்களும், மரக்கரி மற்றும் சரளை கற்கள் தலா 0.34 லட்சம் டன்களும், ஜிப்சம் மற்றும் சோயா பீன்ஸ் தலா 0.08 லட்சம் டன்களும், ரயில்வே துறை பொருட்கள் 0.76 லட்சம் டன்களும் சரக்கு ரயில்கள் மூலம் இந்தக் காலாண்டில் அனுப்பப்பட்டுள்ளது. மதுரை கோட்டத்தில் செயல்பட்டு வரும் வர்த்தக வளர்ச்சி குழுவின் தொடர் முயற்சியால் புதிய புதிய பொருட்கள் சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. அவை கட்டுமானத்திற்கான சரளை கற்கள், உணவுப் பொருள் தயாரிப்பிற்கான சோயா பீன்ஸ், வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் மரக்கரி, தென்மேற்கு ராஜஸ்தான் பகுதிக்கு அனுப்பப்படும் டிராக்டர்கள், சிமெண்ட் தயாரிப்பிற்கு பயன்படும் சுண்ணாம்புக்கல் மற்றும் ஜிப்ஸம் ஆகியவை ஆகும். இவை இந்த காலண்டில் சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு ரூபாய் 25.63 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாய உபயோகத்திற்கான உரம் சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு ரூபாய் 42.24 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் மட்டும் 2.55 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் 36.78 சதவீதம் அதிகம். ரயில்வே வாரிய இலக்கை விட 30.34 சதவீதம் அதிகம். தெற்கு ரயில்வே அளவில் சரக்கு போக்குவரத்து வருமானமாக ரூபாய் 922 கோடி ஈட்டப்பட்டுள்ளது‌. இது கடந்த ஆண்டை காட்டிலும் 36 சதவீதம் அதிகம். கடந்த ஜூன் மாதம் மட்டும் தெற்கு ரயில்வே 3.114 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 53 சதவீதம் அதிகம் ஆகும்.

 

Tags :

Share via

More stories

Logo