அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியிடம் விசாரணை அமலாக்கத்துறைக்கு 2 நாள் அவகாசம்

by Editor / 24-07-2022 08:36:18am
 அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியிடம் விசாரணை அமலாக்கத்துறைக்கு 2 நாள் அவகாசம்

மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையில் வர்த்தகம், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் ஆகிய துறைகளுக்கான அமைச்சராக இருப்பவர் பார்த்தா சாட்டர்ஜி. இவர், 2016 முதல் 2021 வரை அம்மாநில உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர்.

அப்போது, அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து, அது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

அமைச்சர்கள் பார்த்தா சாட்டர்ஜி, பரேஷ் அதிகாரி உள்பட பல அமைச்சர்களின் வீடுகளிலும், பார்த்தா சாட்டர்ஜிக்கு நெருக்கமான அர்பிதா முகர்ஜியின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முதல் சோதனை நடத்தினர்.


இதில், அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து மிகப் பெரிய குவியலாக பணம் கைப்பற்றப்பட்டது. வங்கி அதிகாரிகளின் துணையுடன் இயந்திரங்கள் கொண்டு எண்ணப்பட்டதில் சுமார் ரூ.20 கோடி இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, பார்த்தா சாட்டர்ஜி இன்று காலை கைது செய்யப்பட்டார்.இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள பங்ஷால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும், தன்னை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும் பார்த்தா சாட்டர்ஜி கோரினார்.

பார்த்தா சாட்டர்ஜியை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடாது என்று அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி வழக்கை நீர்த்துப் போகச் செய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எனினும், கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் பார்த்தா சாட்டர்ஜியை அனுமதிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதேநேரத்தில், அவரிடம் 2 நாட்கள் விசாரணை நடத்தவும் அமலாக்கத்துறைக்கு நீதிபதி அனுமதி அளித்தார்.
இதையடுத்து, பார்த்தா சாட்டர்ஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


இதனிடையே, கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஃபிர்ஹத் ஹக்கிம், நிகழ்வுகளை தாங்கள் கவனித்து வருவதாகவும், நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை பாஜகவால் இயக்கப்படுவது போல் தெரிகிறது என குறிப்பிட்ட ஃபிர்ஹத் ஹக்கிம், அதேநேரத்தில், கட்சியிலோ ஆட்சியிலோ முறைகேடுகள் நடைபெறுவதை தங்கள் கட்சி ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்றார்.

 

Tags :

Share via