இ.பி.எஸ்.கூட்டிய அதிமுக பொதுக்குழு செல்லாது- ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
அதிமுகவில் ஜூன் 23ம் தேதி இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் அந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என்றும் அறிவிக்கக்கோரி ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தன. எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் ஜூன் 27ல் தயாரிக்கப்பட்டதாகவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதால் தலைமைக்கழக நிர்வாகிகள் மூலம் பொதுக்குழு நோட்டீஸ், ஜூலை 1ம் தேதி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாகவும், பொதுக்குழு சட்டப்படி தான் கூட்டப்பட்டது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது. பன்னீர்செல்வம் தரப்பில், ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த நிரந்தர அவைத்தலைவர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்பட்டவர் அல்ல என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தீர்ப்பு வாசித்த நீதிபதி, “ஜூன் 23ம் தேதி இருந்த நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். தனி கூட்டம் கூட்டக் கூடாது. பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பு வெளியானதையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் அவரது இல்லம் முன்பு கொண்டாடி வருகின்றனர்.
Tags :