ஸ்டெர்லைட் ஆலை புதிய அலகில் ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் பணி தொடங்கியது

by Editor / 07-06-2021 07:18:52pm
ஸ்டெர்லைட் ஆலை புதிய அலகில் ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் பணி தொடங்கியது

 


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் புதிதாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் அலகில் முதல்கட்டமாக நேற்று 265 சிலிண்டரில் ஆக்சிஜன் நிரப்பபட்டு மருத்துவமனைக்கு அனுப்பபட்டு வருகிறது.
கொரோனா நோய்த் தொற்றின் 2வது அலையால் நாட்டில் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்ற அனுமதியுடன் வேதாந்தா குழுமத்தின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணி கடந்த மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது.
இதில், 300-&க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கடந்த 13&ம் தேதி ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. முதல் நாளில் உற்பத்தி செய்யப்பட்ட 4.8 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் லாரி மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து, ஆக்சிஜன் உற்பத்தி பிரிவில் பழுது ஏற்பட்ட நிலையில், பழுது நீக்கப்பட்டு மீண்டும் 19&ம் தேதி உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது. உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் மருத்துவ பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் 98 சதவீதம் சுத்தமானதாக இருப்பதை நிபுணர் குழுவினர் உறுதி செய்ததைத் தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று மாலை வரை 542 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை, நாமக்கல், கன்னியாகுமரி, தேனி, விருதுநகர், தென்காசி, தருமபுரி, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், கரூர், சேலம், திண்டுக்கல் ஆகிய 16  மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, ரூ. 11 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் அலகில் தினமும் 400 சிலிண்டர் வரை நிரப்பும் வசதி உள்ளது. அதில், முதல்கட்டமாக நேற்று பணிகள் தொடங்கப்பட்டு 265 சிலிண்டரில் ஆக்சிஜன் நிரப்பபட்டு மருத்துவமனைக்கு அனுப்பபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via