டெல்லியில் விவசாயிகள் போரட்டம்; போலீசார் குவிப்பு
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் நாளை போராட்டம் நடத்தவதாக அறிவித்துள்ளனர். இதையொட்டி அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்யுக்த் கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் அமைப்பு உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில் கடந்த 18-ந்தேதி 75 மணிநேர தர்ணா போராட்ட தொடக்க அறிவிப்பினை வெளியிட்டது. தங்களது நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் தொடங்கியது.
இந்த அமைப்பில் 40 விவசாய இயக்கங்கள் அடங்கியுள்ளன. அவர்கள் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தினை முறையாக அமல்படுத்தும்படி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், அரசுக்கு எதிராக கடந்த ஜூலை 31-ந்தேதி பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் வல்லா பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கே மறியல் போராட்டம் நடத்தினர்.
அம்பாலா பகுதியிலுள்ள ஷாம்பு சுங்க சாவடி, பஞ்ச்குலா பகுதியில் உள்ள பர்வாலா மற்றும் கைத்தால் பகுதியின் சீக்கா என்ற இடத்திலும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நாளை டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதையடுத்து பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் டெல்லிக்கு வர தொடங்கி உள்ளனர். இதை முன்னிட்டு தலைநகர் டெல்லியில், போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி-அரியானா திக்ரி எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சிமெண்ட்டால் ஆன தடுப்பான்களை அரண்களாக போலீசார் அமைத்து வருகின்றனர். அந்த பகுதியில், போலீசார் தீவிர வாகன சோதனைகளையும் நடத்தி வருகின்றனர்.
பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாத், போராட்டத்திற்கு முன்னதாக மது விஹார் காவல் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், விவசாயிகளின் குரலை டெல்லி காவல்துறையால் அடக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.
Tags :