காங்கிரசில் மேலும் ஒரு முக்கிய தலைவர் குழுவிலிருந்து விலகல்

by Editor / 21-08-2022 05:08:06pm
காங்கிரசில் மேலும் ஒரு முக்கிய தலைவர் குழுவிலிருந்து விலகல்

இமாச்சல் பிரதேச காங்கிரசின் வழிகாட்டுதல் குழு தலைவர் பொறுப்பிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா விலகியுள்ளார். கட்சியில் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என சோனியாகாந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின் அம்மாநில சட்டப்பேரவைக்கு முதல் முறையாக விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தொகுதி மறுவரையரை பணிகள் நிறைவடைந்த உடன் அம் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வரும் காங்கிரஸ் கட்சி, அதற்காக மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் தலைமையில் பிரச்சாரக்குழுவை அமைத்தது. இந்நிலையில் பிரச்சாரக்குழு தலைவர் பதவியிலிருந்து சமீபத்தில் குலாம்நபி ஆசாத் ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் அதிகாரம் மிக்க ஜி23 தலைவர்களில் ஒருவராக கருதப்படும் குலாம் நபி ஆசாத் பிரச்சாரக் குழு தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தது அக் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் உள்ள மற்றொரு ஜி23 தலைவரான ஆனந்த சர்மா, இமாச்சல் பிரதேச காங்கிரசின் வழிகாட்டுதல் குழு தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.  கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்திக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ள ஆனந்த் சர்மா,  காங்கிரசில் தமக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். கட்சியின் எந்த ஒரு கூட்டம் குறித்தும் தமக்கு தகவல் தெரிவிக்கப்படுவதில்லை என்றும், தாம் கூட்டத்திற்கு அழைக்கப்படுவதில்லை என்றும் ஆனந்த் சர்மா தனது கடிதத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எனினும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்வேன் என்றும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

இமாச்சல் பிரதேசத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக விளங்கும் ஆனந்த் சர்மா வழிகாட்டுதல் குழு தலைவர் பதவியிலிருந்து விலகியிருப்பது அக்கட்சியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் ஆனந்த் சர்மாவின் இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

 

 

Tags :

Share via