சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் தங்க வேட்டை-4 பேர் கைது.

by Editor / 22-08-2022 09:37:28pm
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் தங்க வேட்டை-4 பேர் கைது.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர். அப்போது இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது 3 பேரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து இருந்ததை கண்டு பிடித்தனர். 3 பேரிடம் இருந்து ரூ. 59 லட்சத்தி 35 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 310 கிராம் தங்கத்தை கைப்பற்றினார். அதே விமானத்தில் இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்து இருந்த ரூ.12 லட்சத்தி 86 ஆயிரம் மதிப்புள்ள 284 கிராம் தங்க கட்டியை கைப்பற்றினார்கள்.

அதுபோல் இலங்கையில் இருந்து சென்னை வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த வாலிபரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது உள்ளாடையில் இருந்து ரூ. 17 லட்சத்தி 89 ஆயிரம் மதிப்புள்ள 395 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.

மேலும் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் இருக்கையின் அடியில் மறைத்து வைத்திருந்த ரூ. 24 லட்சத்தி 72 ஆயிரம் மதிப்புள்ள 540 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

அதுப்போல் சீனா மற்றும் இங்கிலாந்தில் இருந்து 3 பார்சல்கள் பன்னாட்டு தபால் பிரிவுக்கு வந்தன. சீனாவில் இருந்து வந்த 2 பார்சல்கள் தென்காசிக்கு செல்ல இருந்தது. அதில் அலங்கார பொருட்கள் என இருந்தது. இங்கிலாந்தில் இருந்து சென்னைக்கு வந்த பார்சலிலும் அலங்கார பொருட்கள் இருந்தன. 3 பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அதில் உள்ள முகவரியில் விசாரித்த போது போலியானது என தெரியவந்தது. இதையடுத்து 3 பார்சல்களையும் பிரித்து பார்த்த போது 31 தங்க கட்டிகள் இருந்தன. ரூ.22 லட்சத்தி 49 ஆயிரம் மதிப்புள்ள 420 கிராம் தங்க கட்டிகளை கைப்பற்றினர்.

ஒரே நாளில் நடத்திய சோதனையில் ரூ. 1 கோடியே 34 லட்சத்தி 31 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 949 கிராம் தங்கம் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 இலங்கை வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தபால் பார்சலில் தங்கத்தை அனுப்பியதை யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Gold rush at Chennai Meenambakkam International Airport- 4 people arrested.

Share via

More stories