சுப்ரமணியன்சாமி மீது நடவடிக்கை  எடுக்கக் கோரி வழக்கு

by Editor / 08-06-2021 04:58:59pm
சுப்ரமணியன்சாமி மீது நடவடிக்கை  எடுக்கக் கோரி வழக்கு

 


சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளிக்கு ஆதரவான சுப்ரமணியன் சாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய மக்கள் மன்றத்தின் தலைவரான வாராகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “பள்ளி மற்றும் பயிற்சி வகுப்புகளில் ஆசிரியர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் அளித்த புகாரில் தமிழ்நாடு அரசு விசாரணை நடத்தி, கைது நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில், மாநிலங்களவை பாஜக உறுப்பினரான சுப்ரமணியன் சாமி, ஆளுனர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பிய கடிதத்தில், திமுக ஆட்சிக்கு வந்தது முதல் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு எதிராக செயல்படுவதாகவும், இதில் ஆளுனர் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவும், தலைமை செயலாளரை அழைத்து விளக்கம் பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
மேலும், இதே நிலை நீடித்தால் ஆட்சி கலைப்பிற்கு பரிந்துரைப்பதை விட வேறு வழியில்லை என்றும் சுப்ரமணியம் சாமி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.பாலியல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதை, குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக அரசு செயல்படுவதாக குற்றஞ்சாட்டி சுப்பிரமணியம் சாமி கடிதம் எழுதியிருப்பது, அரசியல் சட்டத்திற்கும், அவர் வகிக்கும் எம்பி பதவிக்கான விதிமுறைகளுக்கு எதிரானது.இதுதொடர்பாக குடியரசுத் தலைவர், ஆளுநர், டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு மே 29ஆம் தேதி புகார் அளித்திருந்தேன். எனது புகாரின் மீது இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசிற்கும், காவல் துறைக்கும் உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், போக்சோ சட்டத்தில் பதிவான வழக்குகளின் விசாரணையில் தொடர்புடையவர்களுக்கு ஆதரவாகவும், சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் வகையிலும் சுப்ரமணியன் சாமி பேசுவதற்கு இடைக்கால தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு இந்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories