நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை

நலிந்த கலைஞர்களுக்கு மாதம் மூன்றாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதன்படி, ஆயிரம் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று, 11 கலைஞர்களுக்கு நிதி ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கினார்.
இதன்மூலம், தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் வாயிலாக பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் வாழும் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவி திட்டத்தின் கீழ், 2018-2019, 2019-2020 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு தலா 500 நலிந்த கலைஞர்கள் வீதம் மொத்தம் ஆயிரம் நலிந்த கலைஞர்கள் பயனடைவார்கள்.மேலும், நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதியுதவியை இரண்டாயிரம் ரூபாயிலிருந்து, மூன்றாயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிலுள்ள ஆறாயிரத்து 600 அகவை முதிர்ந்த செவ்வியல் மற்றும் கிராமியக் கலைஞர்கள் பயன்பெறுவார்கள்.இந்நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் பி.சந்திரமோகன், கலை பண்பாட்டுத் துறை ஆணையர் வ.கலையரசி, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் தேவா, உறுப்பினர் செயலாளர் தங்கவேலு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags :