தடுப்பூசி இருப்பு குறித்த தகவல்களை வெளியிட  ஒன்றிய அரசு தடை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by Editor / 10-06-2021 06:58:03pm
தடுப்பூசி இருப்பு குறித்த தகவல்களை வெளியிட  ஒன்றிய அரசு தடை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 

கொரோனா தொற்றுக்கு இந்தியாவில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. தடுப்பூசிகளின் வரவு, இருப்பு, எத்தனை பேருக்கு எந்த தடுப்பூசி போடப்பட்டது, எத்தனை தடுப்பூசிகள் வீணானது குறித்த தகவல்களை, அவ்வப்போது மாநில அரசுகள் ஊடகங்கள் வாயிலாகவும், இணையதளத்திலும் வெளியிட்டு வந்தன.
ஆனால், தடுப்பூசி இருப்பு குறித்த தகவல்களை, எங்களின் கவனத்துக்கு கொண்டு வராமல், பொது தளத்திலோ, ஊடகத்திற்கோ வெளியிடக் கூடாது என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் கூறியது,
தற்போதுள்ள தடுப்பூசிகள் குறித்த தகவல்களைப் பகிர வேண்டாம் என்று ஒன்றிய அரசு, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறது. ஆனால் நாங்கள் மக்களுக்கு தகவல் தெரிவிக்காவிட்டால், அவர்கள் தடுப்பூசி மையத்திற்குச் சென்று, ஏமாற்றம் அடைவார்கள்.எனவே, மக்களிடம் தடுப்பூசி குறித்து உண்மை நிலையை தெரிவிப்பதுதான் சரியாக இருக்கும். இதுவரை ஒரு கோடியே 1 லட்சத்து 6,300 தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்துள்ளன. இதில் 97 லட்சத்து 62 ஆயிரத்து 957 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தற்போது சென்னையில் மட்டுமே 1,600 தடுப்பூசிகள் உள்ளன. மீதமுள்ள 37 மாவட்டங்களிலும் தடுப்பூசிகள் இல்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஒன்றிய அரசு ஜூன் மாதத்துக்கான தொகுப்பில் இருந்து 37 லட்சம் தடுப்பூசிகள் தருவதாக தெரிவித்துள்ளது. இதில் வருகிற 13ஆம் தேதிக்குள் 6 லட்சம் தடுப்பூசிகள் வரும் என்று காத்திருக்கிறோம்.
ஜூன் 21ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் பணி தீவிரப்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு தேவையான ஒதுக்கீடுகளை கேட்டு பெற முடிவு செய்துள்ளோம். தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக குறைந்து வருகிறது. விரைவில் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்றுதெரிவித்தார்.

 

Tags :

Share via