14ம் தேதி ஸ்டாலின் பிரதமரை சந்திக்க திட்டம் ?
தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் விரைவில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தமிழ்நாட்டு முதல்வராக ஸ்டாலின் கடந்த மாதம் 7ஆம் தேதி பொறுப்பேற்றார். கொரோனா காலம் என்பதால் அவரது பதவியேற்பு ஆளுநர் மாளிகையில் எளிமையாகவே நடந்தது. மிகவும் இக்கட்டான சூழலில் பதவியேற்றுள்ள ஸ்டாலின், வெற்றிக் கொண்டாட்டங்களை தவிர்த்து கொரோனா தடுப்பு பணிகளில் முழு மூச்சாக ஈடுபடுமாறு அமைச்சர்களுக்கும், திமுக நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் ஒரு மாத கால ஆட்சி பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதேசமயம், சில குறைகளும் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அவ்வாறு சுட்டிக்காட்டப்படுபவைகளுக்கு உடனடியாக அவர் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, கொரோனா தடுப்பு பணிகள் தமிழ்நாட்டில் வேகமெடுத்துள்ளன. அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா தொற்றின் வேகம் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஒன்றிய அரசுக்கு நேர் எதிரான நிலைப்பாட்டில் ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய தமிழ்நாட்டு அரசு இருந்தாலும், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஒன்றிய அரசின் உதவிகளும் தேவைப்படுகின்றன. இந்த நிலையில், ஸ்டாலின் பதவியேற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் பிரதமர் மோடியை அவர் விரைவில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக தமிழக அரசின் சார்பில் பிரதமர் அலுவலகத்திடம் நேரம் ஒதுக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், வருகிற 14, 15, 16 ஆகிய தேதிகளில் ஸ்டாலின் பிரதமரை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிரதமரை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க இருக்கும் தேதி குறித்து பிரதமர் அலுவலக அதிகாரிகள் பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
டெல்லி செல்லும் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து தமிழக நலத் திட்டங்களுக்கான கோரிக்கை வைப்பார் என்றும், இந்தப் பயணத்தின் போது குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்களை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags :