கோவாவில் கூண்டோடு காலியாகும் காங்கிரஸ்

by Staff / 14-09-2022 01:15:09pm
கோவாவில் கூண்டோடு காலியாகும் காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி செல்வாக்கு பெற்றிருந்த மாநிலங்களில் கோவாவும் ஒன்று. ஆனால் கோவா காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அடுத்தடுத்து அக்கட்சியில் இருந்து வெளியேறினர். பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி என பல கட்சிகளில் முன்னாள் காங்கிரஸ் தலைகள் இணைந்தனர்.

இதனால் கோவாவில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியானது. கோவா சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் 11 எம்.எல்.ஏக்களைத் தக்க வைத்துக் கொள்வது என்பதில் காங்கிரஸ் கவனம் செலுத்தியது. இதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, 11 எம்.எல்.ஏக்களிடம் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை கூட நடத்தினார்.

ஆனால் அவை சிலகாலங்கள் மட்டுமே நிலைத்தன. அக்கட்சி மேலிடம் கூட்டிய கூட்டத்தை எம்.எல்.ஏக்கள் புறக்கணித்தனர். மேலும் சில எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் இருக்கின்றனர் எனவும் தகவல் வெளியானது. இதனால், பீகார், மணிப்பூர், அசாமை தொடர்ந்து கோவாவிலும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களை வளைப்பதில் பாஜக தீவிரம் காட்டுவதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த சலசலப்புகளுக்கு இடையே, கோவா காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 8 பேர் அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகரை சென்று சந்தித்துள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று பாஜகவில் சேருவதாகவும் கூறப்படுகிறது. மொத்தம் உள்ள 11 எம்எல்ஏக்களில் முன்னாள் முதலமைச்சர் உட்பட 8 பேர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேருவதால், கோவாவில் கூண்டோடு காலியாகும் சூழ்நிலை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

கோவாவில் கூண்டோடு காலியாகும் காங்கிரஸ்
 

Tags :

Share via