மதுரையில் லஞ்சம் வாங்கிய மத்திய பொதுப்பணித்துறை அதிகாரி கைது சி.பி.ஐஅதிரடி நடவடிக்கை
மதுரையிலுள்ள மத்திய பொதுப்பணித்துறை மண்டல அலுவலகத்தில் நிர்வாக பொறியாளராக பணியாற்றி வருபவர் பாஸ்கர். இவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் சிபிஐக்கு சென்றுள்ளன.
அந்த அடிப்படையில் சி.பி.ஐ அதிகாரிகள் நிர்வாகப் பொறியாளர் பாஸ்கரை பற்றி ரகசியமாக விசாரித்தும், அவருடைய அலுவலக தொலைபேசி மற்றும் அலைபேசிக்கு வரும் அழைப்புகளை கண்காணித்தும் வந்தனர்.
இந்நிலையில் மத்திய பொதுப்பணித்துறை ஒப்பந்த பணிகளை எடுத்து வந்த ஒப்பந்ததாரர்களான சிவசங்கர்ராஜா, நாராயணன் ஆகிய இருவர், தாங்கள் எடுத்த பணிக்கான தொகையை உடனடியாக வழங்கும்படி பாஸ்கரிடம் கேட்டுள்ளனர். அதற்கு தனக்கு லஞ்சம் தர வேண்டும் என பேரம் பேசியுள்ளார். அதற்கு ஒத்துக்கொண்டவர்களிடம் வீட்டிற்கு வந்து கொடுக்குமாறு கூறியுள்ளார்.
இதனை சி.பி.ஐ அதிகாரிகள் உறுதி செய்து கொண்டனர். எனவே அன்று இரவு மதுரை மீனாம்பாள்புரத்தில் உள்ள மத்திய அரசு அலுவலர் குடியிருப்பில் உள்ள பாஸ்கரின் வீட்டுக்கு ஒப்பந்ததாரர்கள் சிவசங்கர் ராஜா, நாராயணன் பணத்துடன் வந்துள்ளனர்.லஞ்சப் பணத்தை வாங்கும்போது அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ அதிகாரிகள், பொறியாளர் பாஸ்கரையும் லஞ்சம் கொடுத்த ஒப்பந்ததாரர்கள் சிவசங்கர்ராஜா, நாரயணன் ஆகியோரை கைது செய்து ரூ 70,000-ஐயும் கைப்பற்றினார்கள்.
அதன் பின்பு மத்திய பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பொறியாளர் பாஸ்கர் அறையை சோதனை நடத்தியதில் அங்கும் கவர்களில் இருந்த பணத்தை கைப்பற்றினர். இதையும் சேர்த்து மொத்தம் ரூ 1,85,000-யுடன் மூவரையும் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அதன் பின்பு அவர்கள் ரிமாண்ட் செய்யப்பட்டார்கள். இதைத்தொடர்ந்து மதுரை மத்திய பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நடந்துவரும் ஊழல்களை சிபிஐ விசாரித்து வருகிறது.
Tags :