சுமார் 25 லட்சம் மதிப்பிலான , 3000 கிலோ குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல்

by Staff / 27-09-2022 04:42:07pm
சுமார் 25 லட்சம் மதிப்பிலான , 3000 கிலோ குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல்

வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் பகுதியிலுள்ள ரஹ்மானிய நகரில் தனியார் ஒருவரது வீட்டை வாடகைக்கு எடுத்த கும்பல் , குடோன் ஆக பயன்படுத்தி அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா பான்பராக் உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ரகசிய தகவல் தனிப்படை போலீசாருக்கு புகார் வந்துள்ளது. இதை அடுத்து சம்பந்தப்பட்ட வீட்டை தனிப்படை போலீசார் மனோகரன் மற்றும் செந்தில் ஆகியோரால் கடந்த 5 நாட்களாக கண்காணிக்கப் பட்டு வந்தது. நேற்று முன்தினமிரவு பண்டல் பண்டல் களாக லாரியில் கொண்டு வந்து குடோனில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று அதிகாலை அதிரடியாக அந்த குடோன் போலீசாரால் சுற்றி வளைக்கப் பட்டது. இதில் சம்பந்தப்பட்ட குடோன் உரிமையாளர்கள் தப்பி ஓடிவிட்ட நிலையில் , பூட்டப்பட்ட குடோன் கதவை போலீசார் உடைத்து , உள்ளே சென்று சோதனை செய்தனர். இதில் நூற்றுக்கணக்கான சாக்கு மூட்டைகள் மற்றும் விதவிதமான அட்டைப்பெட்டிகளில் , பண்டல் பண்டல் களாக , தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்பராக் உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்த தகவலை , தனிப்படை போலீசார் வலங்கைமான் போலீசாருக்கு தெரிவித்த தகவலின் பேரில் , சம்பவ இடத்திற்கு நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா , இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்தனர். பின்னர் அந்த குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 25 லட்சம் மதிப்பிலான , 3000 கிலோ குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து வலங்கைமான் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் தலைமறைவான , அந்த பதுக்கலில் தொடர்புடைய , தற்போது கோவிந்தகுடி பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் , புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினம் , மணமேல்குடி வடக்கு வீதியை சேர்ந்த சம்சுதீன் மகன் ஜமாலுதீன் (வயது 42 )மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஷர்புதீன் மகன் பாதுஷா (வயது29) ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா கூறியதாவது. தமிழக அரசால் தற்போது தமிழகம் முழுவதும் போதை பொருட்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான்பராக் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பதுக்குவோர் மற்றும் விற்பனை செய்பவர் முதல் நடவடிக்கை எடுக்கும் வகையில் கருடா ஆபரேஷன் செயல்பட்டு தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் திருவாரூர் மாவட்ட சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் கருடா ஆபரேஷன் மூலம் இந்த போதைப் பொருள் பதுக்கல் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது ஆவூரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க படுவதுடன் இதுபோன்று தொடர்ந்து களிலும் விற்பனையிலும் ஈடுபடும் நபர்கள் மீது அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து நபர்களையும் கருட ஆபரேஷன் மூலம் நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்ட கட்டிடத்திற்கு சீல் வைத்தனர். இச்சம்பவம் நேற்று அதிகாலை முதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via