பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட நடைமேடை கட்டண உயர்வை கைவிட கோரி.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் கார்த்திக் என்பவர் தென்னக ரயில்வேயின் துணை பொது மேலாளரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னை கோட்டத்தின், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூபாய் 10 லிருந்து 20 ஆக உயர்த்தப்படுவதாகவும், இந்த கட்டண உயர்வு அக்டோபர் 1ஆம் தேதி முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அநியாய கட்டண உயர்வை எந்த விதத்திலும் ஏற்க முடியாது.
சென்னை கோட்டத்தின் ரயில் நிலையங்களை மிகவும் எளிய, அன்றாடம் உழைக்கக்கூடிய கூலி தொழிலாளர்கள் தொடங்கி பல்வேறு பணிகளுக்கு செல்லும் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு உதவியாக ரயில் நிலையம் வந்து செல்பவர்களும் உள்ளனர். இந்நிலையில் இந்த கட்டண உயர்வு என்பது அவர்களுக்கு மிகுந்த சிரமத்தை உண்டாக்கும்.
மேலும் பண்டிகை காலத்தில் பொருட்கள் விலையேற்றம் போல் கட்டணத்தை உயர்த்த ரயில்வே துறை தனியார் தொழில் அல்ல. அது அரசின் சேவைத்துறை என்பதை நினைவுபடுத்துகிறோம்.
எப்போதும் பண்டிகை நாட்களில் அதிகளவில் மக்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துவதினால் ரயில்வே துறைக்கு லாபம் கிடைக்கிறது. இந்த கட்டண உயர்வை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு, இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்.என தெரிவித்துள்ளார்.
Tags :