ஸ்பெயின் - சுவீடன் ஆட்டம் டிரா!

by Editor / 24-07-2021 07:59:15am
ஸ்பெயின் - சுவீடன் ஆட்டம் டிரா!

யூரோ கால்பந்து தொடரில் ஸ்பெயின் - சுவீடன் அணிகள் இடையிலான ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது.

யூரோ கால்பந்து தொடரில் நேற்று ஸ்பெயினின் செவில்லே நகரில் 'இ' பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் - சுவீடன் அணிகள் மோதின. 22-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் கோக், இலக்கை நோக்கி அடித்த பந்து வலது புறம் விலகிச் சென்று ஏமாற்றம் அளித்தது.

41-வது நிமிடத்தில் சுவீடனின் அலெக்சாண்டர் இசாக்கின் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்காமல் போனது. முதல் பாதியில் ஸ்பெயின் அணி பெரிதும் ஆதிக்கம் செலுத்திய போதிலும் அந்த அணியால் கோல் அடிக்க முடியாமல் போனது. முதல் 45 நிமிடங்களில் மட்டும் ஸ்பெயின் அணி 419 பாஸ்களை மேற்கொண்டது.

2-வது பாதியில் 61-வது நிமிடத்தில் சுவீடன் அணியின் மார்கஸ் பெர்க், கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறினார். ஸ்பெயின் அணியின் தற்காப்பு வீரர்களை லாவகமாக ஏமாற்றி பந்தை பெர்க்கிற்கு கடத்தி கொடுத்திருந்தார் இசாக்.

ஆனால் அதை அவர், கோலாக மாற்றத் தவறினார். 77 மற்றும் 89-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் கோல் அடிக்கும் முயற்சிகளை தகர்த்தெறிந்தார் சுவீடன் கோல்கீப்பர் ராபின் ஆல்சன். முடிவில் ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது. இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணி ஒட்டுமொத்தமாக 917 பாஸ்களை மேற்கொண்டது. யூரோ கால்பந்து வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் அதிக பாஸ்கள் மேற்கொள்ளப்பட்ட வகையில் இது சாதனையாக அமைந்தது.

 

Tags :

Share via