தூத்துக்குடியில் லாரி டிரைவர் அடித்துக் கொலை
தூத்துக்குடியில் லாரி டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். லாரி டிரைவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பெருநாழியை சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 35). லாரி டிரைவர். இவர் கடந்த 10-ந் தேதி தூத்துக்குடிக்கு லாரி ஓட்டி வந்தார். அன்று மாலையில் மடத்தூரில் இருந்து சோரீஸ்புரம் செல்லும் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மணிகண்டன், அவரது நண்பர் பேரூரணி சமத்துவபுரத்தை சேர்ந்த தங்கம் மகன் பாலமுருகன் (31) மற்றும் 2 பேர் மது குடித்தனர். பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மணிகண்டனை பிடித்து கீழே தள்ளி உள்ளனர். இதில் மணிகண்டன் கீழே விழுந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்தும் மணிகண்டன் எழுந்திருக்காததால், குடிபோதையில் மயங்கி கிடப்பதாக நினைத்து அவர்கள் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அடித்துக் கொலை நேற்று முன்தினம் காலையில், அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து ஆம்புலன்சு மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து சிப்காட் போலீசார் சம்பவம் நடந்த பகுதிக்கு சென்றனர். அங்கு உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர். அதில், பாலமுருகன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து மணிகண்டனை தாக்கியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் நேற்று கொலை வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தார். அவரது நண்பர்கள் வேல்முருகன், அய்யாத்துரை ஆகியோரை தேடி வருகின்றனர்.
Tags :