கஞ்சா கடத்துவோர் மீது தீவிர நடவடிக்கை எடுக்கும் எஸ். பி.

by Staff / 14-10-2022 02:28:16pm
கஞ்சா கடத்துவோர் மீது தீவிர நடவடிக்கை எடுக்கும் எஸ். பி.

மதுரை மாவட்டம், சேடபட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கம்மாளபட்டி சுடுகாட்டு பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடந்த 07. 10. 2022-ம் தேதி சேடபட்டி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் சோதனையில் ஈடுபடும்போது சட்டத்திற்குப் புறம்பாக 24 கிலோ கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த மதுரை மாவட்டம், சேடபட்டி காவல் நிலைய சரகம் கம்மாளபட்டியைச் சேர்ந்த 1) ஆனந்த் 21, த/பெ சேதுராமன் 2) ஆனந்தகுமார் த/பெ பால்சாமி, ஆகியோர்கள் மீது சேடபட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேற்படி வழக்கில் தப்பியோடிய எதிரி சேதுராமன் த/பெ நல்லமாயத் தேவர் என்பவர் 10. 10. 2022 அன்று கைது செய்யபட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

மேற்படி சேதுராமனிடம் நடத்திய தொடர் விசாரணையில் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணம் மாவட்டம் பொங்காரம் மெரகல்லு என்ற கிராமத்தைச் சேர்ந்த உட்டு பாலம் நாயுடு என்கிற அப்பாவு நாயுடு (26), த/பெ உட்டு அப்பா ராவ் என்பவரிடம் கஞ்சா மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்து வந்ததாக தெரிய வந்தது. அதன்படி மேற்படி எதிரியை கைது செய்ய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி சோழவந்தான் காவல் ஆய்வாளர் திரு. சிவபாலன், மேலூர் மதுவிலக்கு ஆய்வாளர் திருமதி. ஜெயந்தி மற்றும் சார்பு ஆய்வாளர்கள் திரு. துரைசிங்கம், திரு. அருண் ஆகியோர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இத்தனிப்படையினரின் தீவிர முயற்சியால் மேற்படி எதிரியான உட்டு பாலம் நாயுடு என்கிற அப்பாவு நாயுடு ஆந்திரா மாநிலத்தில் வைத்து கைது செய்யபட்டு மதுரை மாவட்டத்திற்கு அழைத்து வந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும், மதுரை மாவட்டத்தில் இது போல் சட்டவிரோதமாக கஞ்சர் கடத்தலில் ஈடுபடுவோர்கள் பெரும்பாலும் ஆந்திர மாநிலத்திலிருந்து மொத்தமாக கொள்முதல் செய்து மதுரை மாவட்டத்தில் விற்பனை செய்வதாக தகவல் தெரியவந்ததால் தனிப்படை அமைக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதில் மேற்படி எதிரி உட்டு பாலம் நாயுடு என்கிற அப்பாவு நாயுடு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது நாமக்கல்
மாவட்டம் நள்ளிபாளையம் காவல்நிலையத்தில் 240 கிலோ கிராம் கஞ்சா கடத்தியது சம்மந்தமாகவும், மதுரை மாவட்டம் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவில் 160 கிலோ கிராம் கஞ்சா கடத்தியது சம்மந்தமாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுவரை கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்தவரை தனிப்படை பிரிவினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இனி வரும் காலங்களில் இது போன்று ஆந்திரா மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்து உள்ளார்கள்.

 

Tags :

Share via