ஆம்புலன்ஸ்க்கு வழிவிட தவறினால் ரூ.10,000 அபராதம் - தமிழக அரசு

by Staff / 20-10-2022 12:24:46pm
ஆம்புலன்ஸ்க்கு வழிவிட தவறினால் ரூ.10,000 அபராதம் - தமிழக அரசு

தமிழகத்தில் சாலைகளில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட பிற அவசரகால வாகனங்களுக்கு வழிவிட தவறினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. மேலும், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கினாலும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சாலைகளில் பைக் ரேஸ் சாகசங்கள், பொதுமக்களுக்கு அபாயம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது நாளுக்கு நாள் தொடர்கதையாகி வரும் சூழலில் அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு சாலை போக்குவரத்து விதிகளில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அபராத தொகைகள் அதிக அளவில் உயர்த்தப்பட்டு உள்ளது. பல்வேறு குற்றங்களுக்கான, விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆம்புலன்சுக்கு வழிவிடுவது மிகப்பெரிய குற்றம். இது எந்த வாகனமாக இருந்தாலும் அந்த அபராதம் பொருந்தும்.

தீயணைப்பு வாகனம், அவசர வாகனங்களுக்கு வழிவிடவில்லை என்றாலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தேவையின்றி ஹார்ன் அடித்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆபத்தான முறையில் வண்டி ஓட்டினால் 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சரக்கு ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு வாகனங்களும் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே சரக்கை ஏற்றிச்செல்ல வேண்டும்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி அவருடன் பயணிக்கும் நபருக்கும் இனி அபராதம் விதிக்கப்படும். இதற்கு முன் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் ரேஸிங் செய்யும் வகையில் வாகனம் ஓட்டினால் அதற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ரிஜிஸ்டிரேஷன் இல்லாத வாகனத்தை ஓட்டினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

இந்த புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த விதிகள் 4 சக்கர வாகனங்களுக்கும் பொருந்தும். ஆனால் வாடகை வாகனங்களில் செல்லும் பயணிகளுக்கும், ஆட்டோவில் செல்லும் பயணிகளுக்கும் இது பொருந்தும் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை விதிகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. டூவீலர்களை அனுமதி இன்றி கமர்ஷியலாக டிரான்ஸ்போர்ட் வாகனம் போல பயன்படுத்தினால் அதற்கும் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via