இன்று முதல் அமலாகிறது புதிய மோட்டார் வாகன சட்டம்.

by Editor / 26-10-2022 08:44:44am
இன்று முதல் அமலாகிறது  புதிய மோட்டார் வாகன சட்டம்.

மோட்டார் வாகன சட்டத்தின் திருத்தப்பட்ட விதிமுறையின்படி 28ஆம் தேதி அபராதத் தொகை வசூலிக்கப்படும் என முதலில் தெரிவித்திருந்தது. தற்போது இந்த நடைமுறை இன்று முதலே அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறையின் படி போதையில் வாகனம் ஓட்டுபவரிடம் அபராதம் வசூலிக்கப்படும். அத்துடன் அவரது பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அபராதம் விதிக்கப்படும்.

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதமானது பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை ஓட்டுவது உள்பட போக்குவரத்து விதிகளை மீறினால் ரூ 1000 முதல் ரூ 10000 வரை அபராதம் வசூலிக்கப்படும்.

திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் மற்றும் தண்டனைகள் குறித்து உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரப்பட்டியலின்படி 44 வகையான அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் முதல் முறை விதியை மீறினால் ஒரு அபராதமும் இரண்டாவது முறையும் மீறினால் ஒரு அபராதமும் விதிக்கப்படும்.

உதாரணமாக வாகனத்தின் மேற்கூரை மற்ற இடங்களில் பயணம் செய்தால் முதல் முறை ரூ 500, இரண்டாவது முறை ரூ 1500 அபராதம் வசூலிக்கப்படும். உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டினாலோ அல்லது உரிமம் இல்லாமல் நடத்துநர் பணிக்கு சென்றாலோ ரூ 10000 அபராதம் வசூலிக்கப்படும். அதிவேகமாக வாகனத்தை இயக்கினால் ரூ 1000 அபராதம் வசூலிக்கப்படும்.

பொது சாலைகளில் வாகன பந்தயம் போல வேகமாக இயக்கினால் ரூ 5000 வசூலிக்கப்படும். வாகனங்களை மீறி சுமைகள் வெளியில் நீண்டு இருந்தால் ரூ 20000 அபராதம் வசூலிக்கப்படும். ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாவிட்டால் ரூ 10000 அபராதம் விதிக்கப்படும்.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள வாகனங்களை விற்பனை செய்தால் ரூ 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். விதிகளுக்கு புறம்பாக வாகனங்களில் பாகங்களை மாற்றுவது ஒவ்வொரு மாற்றத்திற்கும் ரூ 5000 அபராதம் வசூலிக்கப்படும். ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டுவது செல்போனில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்குவது என கண்டறியப்பட்டால் ரூ 1000 அபராதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via