விருதுநகர்: பட்டாசு விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் பலி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1,050 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. கொரோனா ஊரடங்கினால் கடந்த ஒரு மாதமாக ஆலைகள் இயங்காத நிலையில், கடந்த ஒரு வாரமாக 50 சதவிகித பணியாளர்களுடன் பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. சாத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல வீடுகளில் சட்டவிரோதமாக கருந்திரிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக போலீஸார் பலரைக் கைது செய்தும், தொடர்ந்து சட்ட விரோதமாகக் கருந்திரி தயார் செய்து வருகின்றனர். இருப்பினும், மீண்டும் மீண்டும் இப்பகுதிகளிலுள்ள வீடுகளில் கருந்திரி மற்றும் பட்டாசு தயாரிப்பு தொடர்ந்து கொண்டுதான் வருகிறது. இந்நிலையில், தாயில்பட்டி, கலைஞர் காலனியைச் சேர்ந்த சூர்யா என்பவர், தனது வீட்டில் நேற்று 'சோல்சா' ரகப் பட்டாசுகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, அவரது வீட்டின் சமையலறையிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி, பட்டாசுகள் மீது பட்டு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், அவரது வீடு தரைமட்டமானது. அடுத்தடுத்த வீடுகளில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளும் வெடித்ததில், அருகருகே இருந்த மூன்று வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில், அப்போலோ என்பவரின் மனைவி செல்வமணி, இவர்களது 5 வயது மகன் ரகபியாசல்மோன், காளிராஜ் என்பவரின் மனைவி கற்பகம் ஆகியோர் உயிரிழந்தனர். இதில், 75 சதவிகித தீக்காயத்துடன் சூர்யாவும், சோலையம்மாள் என்பவர் எலும்புமுறிவு ஏற்பட்டும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், அந்த வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. வருவாய் துறை அதிகாரிகளும் விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக வெம்பக்கோட்டை போலீஸாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சாத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நிகழ்ந்த வெடி விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :