ராமர் கோயில் பெயரில் பண மோசடி: ஐவர் கைது

by Editor / 22-06-2021 09:51:08am
ராமர் கோயில் பெயரில் பண மோசடி: ஐவர் கைது

நொய்டா: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் பெயரில் போலி இணையதளம் தொடங்கி, நன்கொடை என்ற பெயரில் மக்களிடம் பண மோசடி செய்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோயில் பெயரில் போலி இணையதளம் இருப்பதைக் கண்டுபிடித்த காவல்துறையினர், உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். நொய்டா சைபர் காவல்துறையினரும், லக்னௌ சைபர் கிரைம் காவல்துறையினரும் இணைந்து நடத்திய தேடுதல்வேட்டையில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளை அயோத்தியா என்ற பெயரில் இணையதளம் தொடங்கி, அதில், ஒரு வங்கிக் கணக்கு எண்ணை பதிவிட்டு, கோயிலுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் இந்த வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளனர். இப்படி, ராமர் கோயிலுக்கு நன்கொடை அனுப்ப விரும்பிய மக்களிடமிருந்து லட்சக்கணக்கான பணத்தை இவர்கள் மோசடியாகப் பெற்றுள்ளனர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவர்களில் மூன்று பேர் அமேதியைச் சேர்ந்தவர்கள், 2 பர் பிகாரைச் சேர்ந்தவர்கள். அனைவரும் கூட்டு சேர்ந்து கிழக்கு தில்லியின் புதிய அஷோக் நகரில் தங்கியிருந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

 

Tags :

Share via