குளிர்பானத்தில் விஷம் கொலை வழக்கில் திடீர் பரபரப்பு.
குமரி மாவட்டம் பளுகல் அருகே உள்ள ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்தவர் கிரீஷ்மா (வயது 22). இவருக்கும் குமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்த கேரள மாநிலம் முறியன் கரை பகுதியைச் சேர்ந்த ஷாரோன்ராஜ் (23) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட ஷாரோன்ராஜ் கடந்த மாதம் 25-ந் தேதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். சாவில் மர்மம் இருப்பதாக, அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், காதலி கிரீஷ்மா தான், குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து ஷாரோன்ராஜை கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இதன் அடிப்படையில் கிரீஷ்மா, அவரது தாயார் சிந்து, மாமா நிர்மல் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தடயங்களை அழித்ததாக சிந்து மற்றும் நிர்மல்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீ சாரின் விசாரணை யில் கிரீஷ்மாவுக்கு ராணுவ வீரர் ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்திருப்பதும், ஜாதகப்படி கிரீஷ்மாவுக்கு திருமணம் நடந்தால் முதல் கணவர் இறந்து விடுவார் என்பதால், காதலனை அழைத்து அவரை ஏமாற்றி கணவர் எனக் கூறி கிரீஷ்மா விஷம் கொடுத்திருப்பதும் தெரிய வந்தது. இது தொடர்பான விசாரணையின் போது, கிரீஷ்மா தற்கொலைக்கு முயன்றதால், அவரை போலீசார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதற்கிடையில் அவரது தாயார் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோரை ராமவர்மன் சிறையில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விஷ பாட்டிலை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து கிரீஷ்மாவை அழைத்து வந்து விசாரணை நடத்த வேண்டும் என்பதால், அந்த வீட்டுக்கு சீல் வைத்துச் சென்றனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கிரீஷ்மாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவரை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து கிரீஷ்மாவை திருவனந்தபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அழைத்துச் சென்ற போலீசார் அங்கு வைத்து விசாரணை நடத்தினர். மேலும் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று ஷாரோன்ராஜிக்கு விஷம் கொடுத்தது எப்படி? என விசாரணை நடத்த போலீசார் திட்ட மிட்டிருந்தனர்.
இந்தநிலையில் நேற்று யாரோ, கிரீஷ்மா வீட்டில் போலீசார் வைத்திருந்த சீலை உடைத்துள்ளனர். இது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான தகவல் கிடைத்ததும், பளுகல் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தட யங்கள் சேகரிக்கப்பட்டன. இதற்கிடையில் கேரள குற்றப்பிரிவு போலீசாரும் சம்பவ இடம் வந்து பார்வை யிட்டனர். கிரீஷ்மாவை விசாரணைக்கு வீட்டுக்கு அழைத்து வர போலீசார் திட்டமிட்டிருந்த சூழலில், வீட்டில் போலீசார் வைத்த சீல் உடைக்கப்பட்டு இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. வீட்டுக்குள் புகுந்து தடயங்களை அழிக்க முயற்சி நடந்திருக்கலாமா? அவர்கள் யார்? என்பது மர்மமாக உள்ளது. சம்பவம் தொடர்பாக இடைக்கோடு கிராம நிர்வாக அலுவலர் ஷாலினி கொடுத்த புகாரின் பேரில் பளுகல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் கண்காணிப்பு காமிராக்கள் உள்ளதா? அதில் கிரீஷ்மா வீட்டுக்கு வைத்த சீலை உடைத்தவர்கள் குறித்து பதிவு ஏதும் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags :