உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின் 4 பழைய வழக்குகளில் சங்கர் மீண்டும் கைது.

by Editor / 11-11-2022 10:16:46pm
உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்  4 பழைய  வழக்குகளில் சங்கர் மீண்டும் கைது.

தமிழக காவல்துறையில் இலஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றிய  சங்கர் சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு இணையவாசிகள் மத்தியில் பிரபலமானார்.இவர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு பல்வேறு கட்சியினர்,அதிகாரிகள் தரப்பினர் மத்தியிலும் பரப்பரப்பை உருவாக்கிவந்த நிலையில் சமீபத்தில் நீதித்துறை குறித்து பதிவிட்டு சிறைக்கு சென்றார்.இதன் தொடர்ச்சியாக மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கிய 6 மாத கால சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்த நிலையில் ஏற்கனவே சங்கர் மீது நிலுவையில் உள்ள 4 வழக்குகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து உள்ளனர். குறிப்பாக கடந்த 2020ஆம் ஆண்டு ஈ.பி.எஸ் மற்றும் ஓபிஎஸ் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்தை பதிவிட்டதற்காக இரண்டு வழக்குகளும், 2021ஆம் ஆண்டு பிரதமருடைய பயண விவரங்களை பொது வெளியில் வெளியிட்டதற்காக 2 வழக்குகளும், சவுக்கு சங்கர் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்குகளில் சவுக்கு சங்கரை கைது காட்டி உள்ளனர்.

இந்த கைது தொடர்பான ஆவணங்களை சிறைத்துறை அதிகாரிகளிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கொடுத்துள்ளனர். அடுத்தகட்டமாக நாளை இந்த வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முறையாக கைது காட்டி நீதிமன்ற காவலில் அடைக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via