நர்சிங் படிப்போருக்கு ரூ.7,500 முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை : தொழில் முறை ஆங்கிலத் தேர்வு எழுத உள்ள செவிலிய மாணவர்களுக்கு, தேர்வு கட்டண சுமையை குறைக்க, தலா 7,500 ரூபாய் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இங்கிலாந்து நாட்டில், செவிலியர் பணிக்கு, தொழில் முறை ஆங்கிலத்தேர்வு கட்டாயமாகி உள்ளது.
இத்தேர்வை எழுதுவதற்காக, தமிழக செவிலியர் பயிற்சிக் கல்லுாரிகளில், இளநிலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், 481 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.அவர்களுக்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் தேர்வு செய்த, பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. முழு பயிற்சி கட்டணத்தையும் அரசே ஏற்றுள்ளது. இதற்காக, 87.50 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்பட்டது.
பயிற்சி பெறும் மாணவர்களுடன், அமைச்சர் மஸ்தான், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் ஆகியோர் கலந்துரையாடினர். அப்போது, தேர்வு கட்டணத்தை செலுத்த, தமிழக அரசு உதவ வேண்டும் என, மாணவர்கள் கோரினர். இது, முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, தொழில் முறை ஆங்கிலத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின், தேர்வு கட்டண சுமையை குறைக்க, ஒரு செவிலிய மாணவருக்கு, 7,500 ரூபாய் வீதம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால், தொழில்முறை ஆங்கிலத் தேர்வு எழுதும், 481 மாணவ மாணவியர் பயன்பெறுவர்.
Tags :