தமிழக அரசின்  நில ஆர்ஜித சட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி

by Editor / 29-06-2021 04:19:57pm
தமிழக அரசின்  நில ஆர்ஜித சட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி

 


 தமிழக அரசு கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டுவந்த நில ஆர்ஜித சட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. திருவள்ளூரை சேர்ந்த மோகன்ராம், சுனிதா கோவிந்தராஜ் உள்ளிட்ட 55 விவசாயிகள் சார்பில் தமிழக அரசின் புதிய நில ஆர்ஜித சட்டத்தை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் அரசு திட்டங்களுக்காக தனியாரிடம் இருந்து நிலம் கையகப்படுத்தும் போது பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது பற்றிய விதி இடம்பெறவில்லை என்றும் கையகப்படுத்தும் நிலத்திற்கான இழப்பீட்டை 6 மாதத்தில் வழங்க வேண்டும் என்ற விதிகள் இல்லாதது நில உரிமையாளர்களை பாதிப்படைய வைத்திருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டே 2015ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டுவந்த நில ஆர்ஜித சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நில ஆர்ஜித சட்டம் 2015ஐ புதுப்பிக்கும் நோக்கில் நில ஆர்ஜித சட்டம் 2019ஐ தமிழக அரசு இயற்றி இருப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது.
மேலும் புதிய சட்டத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே இந்த சட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது எனக்கூறி ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 
முன்னதாக 2015ஆம் ஆண்டு கொண்டு வந்த நில ஆர்ஜித சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீட்டை தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via