8 ஆண்டுகளில் 80 லட்சம் கோடி கடன் பெற்றிருக்கிறோம்.– சபாநாயகர் அப்பாவு

by Editor / 26-11-2022 09:36:05am
 8 ஆண்டுகளில் 80 லட்சம் கோடி கடன் பெற்றிருக்கிறோம்.– சபாநாயகர் அப்பாவு

இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையின், தணிக்கை வாரம் 2022 நிறைவு விழா
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள லேகா பரிஷ்கா பவனில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு தணிக்கை துறை தலைவர் செல்வப்பெருந்தகை, துணை தலைமை கணக்கர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் அப்பாவு, “மக்களுக்கு வெளிப்படையாக கணக்கு வழக்கு தெரிய வேண்டும் என முதல்வர் விரும்புகிறார். முதல் பாரத பிரதமராக இருந்த நேரு, தணிக்கை துறையிடம் எவ்வாறு நடந்து கொண்டார் என்பதை தலைமை கணக்கு அதிகாரி சொல்வதைக் கேட்கும் போது மெய் சிலிர்த்தது போனேன். தணிக்கை அறிக்கைகள் வரும்போது அவற்றை மதிக்கும், ஏற்றுக்கொள்ளும் மாண்பு தான் பெருந்தன்மை. இன்றைய முதல்வர் பதவிக்கு வந்த அடுத்த நிமிடமே, அனைத்து தணிக்கை அறிக்கைகளையும் சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கச் சொன்னார்.

யார் மனதையும் புண்படுத்த இதை கூறவில்லை. நான் அனைத்து அதிகாரிகளையும் தவறாகவும் தெரிவிக்கவில்லை. வினோத் ராய் CAG தலைவராக இருந்த போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி இழப்பு என்று சொன்னார். ஆனால் ஊழல் நடந்ததற்கான எந்த தடையமும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பதவிக்காலம் முடிந்தவுடன் வினோத் ராய் அனுகூலம் அடைந்தார்.

இந்த நாடு சரியான திசையில் செல்கிறதா என்பது சில நேரங்களில் சந்தேகமாக உள்ளது. 8 ஆண்டுகளில் 80 லட்சம் கோடி கடன் பெற்றிருக்கிறோம். வருமானத்தில், ஆண்டுதோறும் இந்திய நாட்டிற்கான வட்டி மட்டும் 36% ஆகும். 67 ஆண்டுகளில் ரூ.55.87 லட்சம் கோடி ஆகும். நீங்கள் இல்லையென்று சொன்னால், இந்தியா இந்த அளவிற்கு தலை நிமிர்ந்து நிற்குமா என்பதுகூட தெரியவில்லை.

கணக்கு வைத்து தணிக்கை செய்ய வேண்டும். இலங்கை போல வந்து விட கூடாது என்கிற
அச்சத்தில் சொல்கிறேம். கணக்கு தணிக்கை துறை சரியான துறை. யார் சொல்லையும் கேட்டு தவறாக எழுத மாட்டார்கள் என நம்புகிறேன். 82% மக்கள் தங்களின் சேமிப்பை பொதுத்துறை வங்கியில் தான் வைத்துள்ளனர். 130 கோடி மக்கள், ரத்தம் சிந்தி உழைக்கும் வரிப்பணம், பொதுத் துறை வங்கிகளில் ரைட் ஆப் செய்கிறார்கள்.

கடந்த 8 ஆண்டுகளில் ரூ.10.75 லட்சம் கோடி சில நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. ஒரு சில நிறுவனங்களுக்கு சாதகமாக பொதுத்துறை நிறுவனங்கள் கடனை தள்ளுபடி செய்கிறார்கள். இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது” என்று பேசினார்.


 

 

Tags : தணிக்கை வாரம் 2022 நிறைவு விழா

Share via